பொன்னணியாற்றை ஆக்கிரமித்த கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வந்தது. இதனால் நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டதுடன் நிலத்தடி நீர்மட்டமும் முற்றிலுமாக குறைந்து இருந்தது. இந்நிலையில் தற்போது, தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகின்றது. இது மட்டுமின்றி நீர்நிலைகளும் அதன் முழுகொள்ளளவை எட்டி வருகின்றது.
இதே போல் சில இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி உபரி நீரும் வெளியேறி வருகின்றது. இதெல்லாம் இருந்தாலும் கூட அவ்வப்போது பெய்யும் கனமழையால் ஆறுகளில் காட்டாற்று தண்ணீர் அதிக அளவில் செல்கின்றது. அதற்கு காரணம் ஆறுகள் தூர்வாரப்படாததே ஆகும்.
பொன்னணியாறு அணை மற்றும் காட்டாற்று வெள்ளம் அதிகம் செல்லும் பொன்னணியாறு ஆற்றில் பல்வேறு இடங்களில் ஆறு முழுமையாக தூர்வாரப்படாமல் உள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலங்கள் அருகில் தான் தூர்வாரியது போல் சுத்தம் செய்யப்பட்டுள்ளதே தவிர மற்ற இடங்களில் தூர்வாரப்படாமல் உள்ளது. குறிப்பாக ஆவாரம்பட்டி அருகே உள்ள தரைப்பாலப் பகுதிகளில் பொன்னணியாறு உள்ளதா என்பது தெரியாத அளவில் கருவேலமரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
ஆற்றை தூர்வாராமல் இருப்பதால் ஏதோ ஓடை போல் காட்சி அளிக்கின்றது. இது மட்டுமின்றி நீர் முழுமையாக செல்லும் வகையில் இல்லாமல் ஒரு பகுதி மணல் குவிந்தும் மற்ற சில இடங்களில் குப்பை, சில இடங்களில் பள்ளம் என காணப்படுகின்றது.
மழை காலம் இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில் இப்போதே நீர்நிலைகள் நிரம்பி விட்டதால் இன்னும் உள்ள நாட்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஊருக்குள் புகுந்து பலத்த சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து கவனம் செலுத்தி பொன்னணியாறு, மான்பூண்டி ஆறு ஆகியவைகளை முழுமையாக தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu