திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மகன் கண் முன்னே தந்தை வெட்டிக்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மகன் கண் முன்னே தந்தை வெட்டிக்கொலை
X
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மகன் கண் முன்னே தந்தை வெட்டி கொலை செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ள துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 35). அருள் வாக்கு பூசாரி. இவருக்கு 3 மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று காலை சிங்கிவயல் பகுதியில் ஆதினமிளகி உள்ளிட்ட 4 பேருக்கு சொந்தமான கிணற்றில் பாலமுருகன் தன்னுடைய 4 வயது மகனான கருப்பையாவை அழைத்துக் கொண்டு குளிக்க சென்றார். அப்போது அங்கிருந்த ஆதினமிளகி, கிணற்றில் குளிக்கக்கூடாது என்று கூறியுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் மகனை பாலமுருகன் கிணற்றில் குளிக்க வைத்துள்ளார்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஆதினமிளகி, பாலமுருகனின் மார்பில் அரிவாளால் வெட்டியுள்ளார். அவர், ரத்தம் பீறிட நெஞ்சை பிடித்தபடியே வீட்டை நோக்கி அங்கிருந்து சிறிது தூரம் ஓடியுள்ளார். ஆனால், பாதி வழியிலேயே பாலமுருகன் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் மற்றும் வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பாலமுருகன் மகனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், பாலமுருகன் உடல், பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கொலை சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆதினமிளகியை தேடி வருகின்றனர். மகன் கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!