மணப்பாறை நகராட்சியை கைப்பற்றிய அதிமுக; அதிர்ச்சியில் திமுக

மணப்பாறை நகராட்சியை கைப்பற்றிய  அதிமுக; அதிர்ச்சியில் திமுக
X

சுயேச்சைகள் ஆதரவுடன் மணப்பாறை நகர் மன்ற தலைவராக தேர்தெடுக்கப்பட்ட அதிமுக கவுன்சிலர் சுதா பாஸ்கர்

திருச்சி மணப்பாறை நகராட்சியில் திமுக வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் அதிமுக அதிரடியாக வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றியது

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதில் திமுக தலைமை மிகுந்த மகிழச்சியில் உள்ளது. அதே சமயத்தில் திருச்சி மாநகராட்சி உருவானதில் இருந்து 27 வருடங்களாக கூட்டணி கட்சிக்கே மேயர் பதவியை திமுக விட்டுக்கொடுத்து வந்தது.

இந்த முறை அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதன் காரணமாக அமைச்சர் கே.என்.நேரு மேயர், துணை மேயர் பதவி திமுகவிற்குதான் என்று உறுதியாக நின்று, தலைமையிடத்தில் அனுமதியையும் பெற்று வந்தார். இதன் காரணமாக மேயராக திமுக மாநகர செயலாளர் அன்பழகனும், துணை மேயராக திவ்யா தனக்கோடியும் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் திருச்சியில் உள்ள மணப்பாறை நகராட்சியில் கவுன்சிலர்களில், உள்ள 27 இடங்களில் 11இடங்களில் திமுகவும், 11 இடங்களில் அதிமுகவும், 5 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.

இதனால் மணப்பாறை நகராட்சியை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. திமுக பெரிய அளவில் அங்கு காய்களை நகர்த்தாத நிலையில் சுயேச்சை கவுன்சிலர்கள் 5 பேர் கே.என்.நேருவை சந்தித்து திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் மணப்பாறையையும் திமுக கைப்பற்றும் என்று அனைவரும் எண்ணி இருந்த நிலையில் இன்று நகர் மன்ற தலைவருக்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

வாக்கெடுப்பின் முடிவு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதிமுக 15 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றது. திமுகவிற்கு 12 ஓட்டுக்களே கிடைத்தது.

இதனால் மணப்பாறை அதிமுக வெற்றி பெற்று, 18-வது வார்டு கவுன்சிலர் சுதா பாஸ்கர் நகர் மன்ற தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக மணப்பாறை நகராட்சியை திமுக கோட்டை விட்டு உள்ளது.

ஆதரவு அளிப்பதாக கூறிவிட்டு மாற்றி வாக்களித்த அந்த கருப்பு ஆடுகள் யார் என்பதே மணப்பாறையில் ஒரே பேச்சாக உள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!