திருச்சி மாவட்டத்தில் 3 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடத்திலும் தி.மு.க. வெற்றி

திருச்சி மாவட்டத்தில் 3 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடத்திலும் தி.மு.க. வெற்றி
X

துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த வாக்கு எண்ணும் பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் நடந்த 3 ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் மூன்று இடங்களையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் துறையூர் ஊராட்சி ஒன்றியம் 13-வது வார்டு, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் 10-வது வார்டு, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 6-வது வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இன்று காலை தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சிவராசு வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். இந்த மூன்று ஒன்றியங்களிலும் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர், அவர்கள் சார்ந்துள்ள கட்சி பெயர்களையும் மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.

அதன்படி துறையூர் ஊராட்சி ஒன்றியம் 6வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் முருகேசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் அபிராமியை வீழ்த்தி வெற்றிபெற்றார்.முருகேசன் 2570 வாக்குகளும் அபிராமி 1156 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இதேபோல வையம்பட்டி ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர் செல்லமணி 1872 வாக்குகளும் ,அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஜானகி 1670 வாக்குகளும் பெற்றுள்ளனர். இத்தேர்தலில் செல்லமணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது .

அதேபோல மருங்காபுரி ஒன்றியத்தில் தி.மு.க வேட்பாளர் சபியுன்னிஷா 2149 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கனகவல்லி 1628 வாக்குகளும் பெற்றனர். இதில் சபியுன்னிஷா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மூன்று ஊராட்சி ஒன்றிய இடைத் தேர்தலிலும் தி.மு.க. வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!