மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு விழா
மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா. 750 காளைகள் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 18 ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் ஜனவரி 18 ம்தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது.
இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள 750 ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறி வரும் காளைகளை அடக்க 400 மாடுபிடி வீரர்கள் களம் காணுகின்றனர்.
போட்டியில் வீரர்களின் பிடிக்கு அடங்க மறுத்து வெற்றி பெறும் காளைகளுக்கும், காளைகளை அடக்கி வெற்றி பெறும் காளையர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பீரோ, கட்டில், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, அண்டா, ரொக்கப்பணம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பரிசுகள் வழங்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு விழாவை மணப்பாறை வட்டாட்சியர் லஜபதிராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். 300 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டில் காயமடைபவர்களுக்கு அதே பகுதியில் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளும், மாடுபிடி வீரர்களும் முறையான மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu