பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ. கைது
கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ. பழனியம்மாள்.
திருச்சி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் பக்கம் உள்ள அய்யம்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் வையாபுரி. விவசாயி. இவரது மகள் அகிலா. அகிலா தனது தந்தை வாங்கி உள்ள 29 செண்ட் விவசாய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பழனியம்மாள் (வயது44) என்பவரை அணுகி உள்ளார். அப்போது வி.ஏ.ஓ. பழனியம்மாள் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் தனக்கு ரூ5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அகிலா இதுபற்றி திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து வி.ஏ.ஓ. பழனியம்மாள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அவர்கள் செய்த ஏற்பாட்டின்படி இன்று மதியம் அகிலா வி.ஏ.. பழனியம்மாளிம் லஞ்ச பணம் தர தயாராக இருப்பது போல் பேசி உள்ளார். அதனை உண்மை என நம்பிய வி.ஏ.ஓ. பழனியம்மாளை பணத்துடன் தனது அலுவலகத்திற்கு வரும்படி கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கு சென்ற அகிலா, பழனியம்மாளிடம் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பழனியம்மாளை பிடித்தனர். பணத்தை பறிமுதல் செய்ததோடு உடனடியாக அவரை கைது செய்தனர்.
மேலும் வி.ஏ.ஓ. பழனியம்மாளின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் மறைத்து வைத்து இருந்த ரூ.35 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இது தவிர பழனியம்மாளின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புபோலீசார் சோதனை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ. பழனியம்மாள் பின்னர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu