திருச்சி வன உயிரியல் பூங்காவை செயல்பட வைக்க முதல் அமைச்சருக்கு கோரிக்கை
திருச்சி எம்.ஆர். பாளையம் வன உயிரியல் பூங்காவின் முகப்பு தோற்றம்
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மாவட்டத்தில் வானுயர எழுந்து நிற்கும் மலைக்கோட்டை, ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரத்தை கொண்ட ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் உள்ள மாதா ஆலயம், நத்தர் வலி தர்கா முக்கொம்பு உள்ளிட்ட 47 சுற்றுலா தலங்கள் உள்ளன.
தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் ஆன்மீகம் மற்றும் இயற்கை சார்ந்த இந்த சுற்றுலா மையங்களை காண தவறுவதில்லை.
திருச்சி தமிழகத்தின் மத்திய பகுதியாக இருப்பதால் தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலிருந்தும் 5 மணி நேரத்தில் தரைவழி மார்க்கமாகவும் எளிதாக திருச்சியை அடைய முடியும் என்ற காரணத்தினாலும், சென்னை வண்டலூரில் இருப்பதுபோன்ற ஒரு வன உயிரியல் பூங்காவை திருச்சியில் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும்.
இந்த கோரிக்கையை ஏற்று திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையம் என்ற இடத்தில் வன உயிரியல் பூங்கா அமைப்பதற்கு கடந்த 2009ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியது. காலச் சக்கரத்தின் சுழற்சி, இடையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் இந்த வன உயிரியல் பூங்கா இன்றுவரை முழு அளவில் செயல்படாத நிலையில் உள்ளது.
தற்போது அந்த வன உயிரியல் பூங்கா யானைகள் பராமரிப்பு மற்றும் காப்பகமாக செயல்பட்டு வருகிறது. இந்த வன உயிரியல் பூங்காவை முழு அளவில் செயல்பட வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக சுற்றுலா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இந்த மையத்தை முழு அளவிலான வன உயிரியல் பூங்காவாக மாற்றுவதற்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருச்சியைச் சேர்ந்த பிரபல மூளை நரம்பியல் நிபுணரும், திருச்சி மாவட்ட நலப்பணிகள் நிதிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் எம்.ஏ.அலீம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த கோரிக்கையை அவர் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு இணையதளம் மூலமாக அனுப்பி உள்ளார். காலங்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடி விட்டாலும் திருச்சியில் வன உயிரியல் பூங்கா அவசியம் தேவையான ஒன்று என்பதை உணர்ந்து தமிழக அரசு இதற்கான நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா ஆர்வலர்களின் ஆவல் ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu