தம்பதியிடம் அத்துமீறி நடந்த சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் பணியிட மாற்றம்

கோவிலுக்கு வந்த தம்பதியிடம் அத்து மீறி நடந்த போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டுத் தலங்களில் முதன்மைத் தலமாக விளங்குவது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இங்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி மற்றும் முக்கிய திருவிழா காலங்களில் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.
அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் இந்த விடுதிகளில் இரவு தங்கி அதிகாலை அம்மனை தரிசிப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், கடந்த வாரம் அமாவாசை தினத்தன்று வெளியூரில் இருந்து வந்திருந்த தம்பதியினர் கோவில் அருகிலுள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். அப்போது சமயபுரம் போலீசார் ஒவ்வொரு விடுதிக்கும் சென்று சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது ஒரு விடுதியில் தங்கி இருந்த தம்பதியினரிடம் போலீசார் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட பெண்ணின் கணவரை போலீசார் சரமாரியாக தாக்கியும் உள்ளனர். இதுகுறித்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் உண்மை தன்மையை அறிய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் போலீசார் தம்பதியினரிடம் தகாத முறையில் நடந்துகொண்டது உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து சமயபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், போலீஸ்காரர் குமரேசன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், திருமேனி என்பவர் பெரம்பலூர் மாவட்டத்திற்கும், செயலரசு என்பவர் அரியலூர் மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இதற்கான உத்தரவை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் பிறப்பித்துள்ளார். இது சமயபுரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu