ரேஷன் அரிசி அரவை செய்த மண்ணச்சநல்லூர் அரிசி ஆலைக்கு சீல் வைப்பு
மண்ணச்சநல்லூர் அரிசி ஆலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகள்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி ஊராட்சியில் உள்ள எழில் நகர் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி அதனை மாவாக்கி திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களுக்கும் விற்பனை செய்வதாக திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி மணிகண்டன் தலைமையில் மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் சக்திவேல் முருகன், மணச்சநல்லூர் வட்ட வழங்கல் அதிகாரி மரகதவல்லி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாட்டு மேலாளர் வனிதா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அரிசி கடத்தி வைத்திருந்த ஆலையில் பணியாற்றிய பணியாளர்கள், அதிகாரிகளை கண்டவுடன் தப்பிச்சென்றனர் .
இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் கீழ் திருச்சி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மாவு அரவை செய்யும் கூடத்தில் ஆய்வு செய்த போது சுமார் 15 டன் ரேஷன் அரிசிகளும், 10 டன் கோதுமை களும் , மேலும் 5 டன் ரேஷன் அரிசியை மாவாக்கி விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த மாவு மூட்டைகளும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஓம்னி வேன் , எடை மெஷின், தையல் மிஷின், அரவை இயந்திரங்கள், உள்ளிட்டவைகளை பூட்டி ஆலைக்கு சீல் வைத்தனர்.
விசாரணையில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட ரேஷன் அரிசி அரவை ஆலை இருக்கும் எல்லையானது திருச்சி மாவட்டம் லால்குடி வருவாய் வட்டாட்சியர் எல்லைக்குட்பட்ட மாடக்குடி ஊராட்சியில் வருவதால், லால்குடி வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்த் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கஸ்பர் உள்ளிட்டோருக்கு இது தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைத்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்து குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இந்த பகுதிக்கு வந்தது எப்படி இந்த ஆலைக்கு உரிமையாளர் யார்? என்பது குறித்தும், ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்க அனுப்பிய ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக இந்த அரிசி ஆலைக்கு எப்படி வந்தது என்பது குறித்து விரைவில் ரேஷன் கடைகளில் ரகசிய ஆய்வு செய்யப்படும் என்பதனை வட்ட வழங்கல் அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu