மண்ணச்சநல்லூரில் மின்வெட்டு கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

மண்ணச்சநல்லூரில் மின்வெட்டு கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
X

மண்ணச்சநல்லூரில் சாலை மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மின்வெட்டு கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் மின்வெட்டு கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். காசுகடைத்தெருவில் நேற்று மதியம் 2 மணி முதல் இன்று காலை வரை மின் விநியோகம் இல்லை. ஒரே நேரத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் இல்லை. மின்வெட்டு குறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இன்று காலை வரை மின்சாரம் வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் துறையூர்- திருச்சி பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீசார், பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் ஏற்படவில்லை. பொதுமக்களும், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கோடைகாலத்தில், இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டதால், பெரும் சிரமத்திற்கு ஆளாகினோம். இது குறித்து புகார் தெரிவிக்க மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொண்டால் போனை எடுக்கவில்லை. மேலும் மின் தடை காரணமாக காலை குடிநீர் விநியோகமும் நடைபெறவில்லை என்று தெரிவித்தனர்.

பொதுமக்கள் மறியல் காரணமாக திருச்சி-துறையூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயர் அழுத்த மின் வழி பாதையில் உள்ள முக்கிய மின் சாதனம் பழுதானதால் மின்தடை ஏற்பட்டதாகவும், சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள், இரவு முழுவதும் ஈடுபட்டதாகவும், மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare