திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் தேரோட்டம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருச்சியின் அடையாளமாக கருதப்படுவது மலைக்கோட்டை. மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி மட்டுவார் குழலியம்மை கோவிலில் சிவன் அருள் பாலித்து வருகிறார். இங்கு அருள் பாலிக்கும் இறைவன் சிவபெருமான் தனது பக்தை ரத்தினாவதி என்ற செட்டிப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்ததால் தாயமானவர் அழைக்கப்படுகிறார்.
கோவிலின் கீழ்த்தளத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும், மலைக்கோட்டை மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்கள்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா மிகவும் முக்கியமானதாகும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் சுவாமி, அம்பாள் ஆகியோர் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு மலைக்கோட்டை உள்விதி வழியாக 6 மணி அளவில் தேரை அடைந்தனர்.
தாயுமானசாமி பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருளினார்கள். பின்னர் ஆறு மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தார். அப்போது அங்கு கூடி இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் சிவ சிவா, ஓம் நமச்சிவாயா, சிவாய நமஹ என கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் மலைக்கோட்டை கோவிலின் நான்கு வீதிகளிலும் வலம் வந்தது. இதற்காக மலைக்கோட்டை நான்கு வீதிகளிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. நான்கு வீதிகளிலும் திரளான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu