‘தமிழகத்தில் பா.ஜ.க .ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடை திறப்பு’ அண்ணாமலை பேச்சு

‘தமிழகத்தில் பா.ஜ.க .ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடை திறப்பு’ அண்ணாமலை பேச்சு
X

திருச்சி அருகே பாதயாத்திரையில் வேனில் நின்றபடி பேசிய அண்ணாமலை.

தமிழகத்தில் பா.ஜ.க .ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடை திறக்கப்படும் என அண்ணாமலை பரபரப்பாக பேசினார்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக முழுவதும் சட்டமன்றத் தொகுதிகளில் பாதயாத்திரை நடத்தி வருகிறார்.திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் லால்குடி அருகே உள்ள ஆங்கரை பிள்ளையார்கோவில் அருகில் இன்று அண்ணாமலை தனது பாதயாத்திரையை தொடங்கினார்.பின்னர் மலையப்பபுரம், சந்தைப்பேட்டை வழியாக லால்குடி ரவுண்டானா பகுதியில் அந்த யாத்திரை நிறைவு பெற்றது.

பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது;-

லால்குடி தொகுதியில் இளைஞர்கள் அதிகஅளவில் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தருவதாககூறினார்கள்.ஆனால் ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகியும் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை.காவல்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால் இன்று வரை அந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைஎடுக்காமல் கலெக்சன், கமிஷன், கரப்ஷன் என தங்களை பலப்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது.திருச்சி மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் இந்த மாவட்டத்தில் எந்த வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை.

டாஸ்மாக் மதுவினால் ஏழை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக நான்கில் மூன்று பங்கு டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அதிகம் பாதிப்பு இல்லாத கள்ளுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசும் போது,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இந்த பக்தர்கள் உண்டியலில்செலுத்தும் காணிக்கைகளை எடுத்து இந்து சமய அறநிலைத்துறை பெருந்திட்டவளாகம் கட்டுகிறேன் என்ற பெயரில் ரூ. 422 கோடியை எடுத்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஸ்வரூப தரிசனம் என்ற பெயரில் கட்டண கொள்ளை நடக்கிறது. குறைந்த பட்சம் ரூ. 1000 இருந்தால் தான் கோவில் பக்கம் செல்ல முடியமுடியும் என்ற நிலை உள்ளது. 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சிக்குவந்த பிறகு அறநிலைத்துறை என்ற ஒரு துறையே இருக்காது. குடும்ப ஆட்சி நடத்தி வரும் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

முன்னதாக திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் வரவேற்று பேசினார். இதில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்,பார்வையாளர் யோகிதாசன், முன்னாள் மாவட்ட தலைவர் சேது அரவிந்த், மாநில பேச்சாளர் பாடகர் வி.என். தனசேகரன், மாவட்ட நிர்வாகிகள்ரவீந்திரன், குமார், சண்முகம், சூரியகாந்த், ஒன்றிய தலைவர்கள் கணேசன், கண்ணன், பாலகிருஷ்ணன், கார்த்தி, முருகேசன், மற்றும்கோவிந்தராஜ், இலக்கியா, சுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !