மனைவியுடன் தகராறு செய்த கணவர்: தட்டிக்கேட்ட உறவினருக்கு அரிவாள் வெட்டு

மனைவியுடன் தகராறு செய்த கணவர்: தட்டிக்கேட்ட உறவினருக்கு அரிவாள் வெட்டு
X
திருச்சி அருகே மனைவியுடன் தகராறு செய்த கணவர்; தட்டிக்கேட்ட உறவினருக்கு அரிவாள் வெட்டு.

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே மேலரசூர் கிராமத்தில் வசித்து வருபவர் உத்தமர்செல்வன் (வயது 57). இவரது மனைவி அம்சவள்ளி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாட்டில் வேலை பார்த்த உத்தமர்செல்வன் பின்னர் ஊருக்கு திரும்பினார். தற்போது அவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் உத்தமர்செல்வனுக்கும், அம்சவள்ளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அம்சவள்ளி குளத்தூரில் உள்ள தனது தங்கை அமிர்தவள்ளியின் வீட்டுக்கு அருகே வாடகை வீடு எடுத்து, அங்கு தனது மகள்களுடன் கடந்த 10 மாதங்களாக வசித்து வந்தார். மேலும் மாதந்தோறும் அம்சவள்ளி மேலரசூர் வந்து ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அம்சவள்ளி தனது தங்கையின் கணவர் பிச்சை பிள்ளையுடன் மேலரசூர் ரேஷன் கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க வந்தார்.

இதையறிந்து அங்கு சென்ற உத்தமர்செல்வன், இந்த மாதம் தனக்கு ரேஷன் பொருட்கள் வாங்கி கொடுத்து விட்டு கார்டை எடுத்து செல்லுமாறு அம்சவள்ளியிடம் கூறியுள்ளார். அதற்கு அம்சவள்ளி மறுத்ததாகவும், அவரிடம் மீண்டும் கேட்க முயன்றபோது பிச்சைபிள்ளை வேகமாக வந்து அம்சவள்ளி மீது கைவைத்து பேசக்கூடாது என்று உத்தமர்செல்வனை தள்ளி, தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உத்தமர்செல்வன் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து பிச்சைபிள்ளை மீது வீசியுள்ளார். மேலும் அவரை கழுத்து மற்றும் கன்னத்தில் வெட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த பிச்சைபிள்ளை மயங்கி விழுந்தார். உத்தமர்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அம்சவள்ளி, கார் மூலம் பிச்சைபிள்ளையை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து உத்தமர்செல்வனை கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!