லால்குடி அருகே மது குடித்ததை தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

லால்குடி அருகே மது குடித்ததை தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
X

லால்குடி காவல் நிலையம் (பைல் படம்)

லால்குடி அருகே மதுகுடித்ததை தட்டிக்கேட்டவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆங்கரை பகுதியை சேர்ந்த மதிவாணனின் மகன் மாதவன் (வயது 22). பெயிண்டர். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மலையப்பபுரம் பகுதியை சேர்ந்த சுரேந்திரன், குருஜி, சிவா, வினீஷ் ஆகியோர் ஆங்கரை பஸ்நிறுத்தம் அருகே உட்கார்ந்து மது குடித்துள்ளனர்.

இதை அந்த வழியாக சென்ற மாதவன் பார்த்து, எதற்காக இங்கு உட்கார்ந்து மதுகுடிக்கிறீர்கள்? என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் மாதவனை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மாதவனின் அண்ணன் கண்ணதாசன் (வயது 23) என்பவர் லால்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் மாதவனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற 4 பேர் மீதும் லால்குடி போலீஸ் இன்ஸ் பெக்டர் சிவராமன் வழக்குப் பதிவு செய்து அந்த கும்பலை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story