செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
மின்னல் தாக்க இறந்த ஜெயக்குமார்.
தமிழகத்தில் வடகிழக்கு மழை தற்போது தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பெய்த மழையினால் வைகை அணை நிரம்பி வருகிறது. இதனை தொடர்ந்து தேனி உள்பட ஐந்து மாவட்டங்களுக்க வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
மதுரை தவிர திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது இடியுடன் மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பல்லவபுரம் மாமரத்து கொல்லை பகுதியில் வசிப்பவர் ஜெயபால். இவரது மகன் ஜெயக்குமார் (வயது26). இவர் லால்குடி அருகே உள்ள குமுளூர் அரசு வேளாண்மை பொறியியல் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார்.
பல்லவபுரத்தில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது. இப்படி மழை பெய்து கொண்டிருந்தபோது ஜெயக்குமார் வீட்டில் செல்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென வீட்டில் மின்னல் தாக்கியது. இதில் ஜெயக்குமார் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.புகாரின் பேரில் லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இடி மின்னல் ஏற்படும்போது செல்போனில் பேசினாலோ அல்லது பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாலோ கதிர் வீச்சின் காரணமாக செல்போனில் உள்ள அலை வீச்சு உபகரணங்களால் ஈர்க்கப்பட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடுகிறது. எனவே இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும்போது மரத்தடியில் ஒதுங்க கூடாது என்பது போல் செல்போனிலும் பேசக்கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரசு துவங்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu