வாளாடி அருகே திருச்சி- சிதம்பரம் நெடுஞ்சாலையில் பள்ளத்தில் இறங்கிய கார்

வாளாடி அருகே திருச்சி- சிதம்பரம் நெடுஞ்சாலையில் பள்ளத்தில் இறங்கிய கார்
X

 திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் லால்குடி அருகே வாளாடி ஊராட்சியில் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கிய காரை மீட்கும் பொதுமக்கள்.

வாளாடி அருகே திருச்சி- சிதம்பரம் நெடுஞ்சாலையில் பள்ளத்தில் இறங்கிய கார் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டது.

திருச்சி- சிதம்பரம் நெடுஞ்சாலையில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் முறையாக நடைபெறாததால் உயிர் பலி வாங்கும் விபத்துக்கள் தொடர்ந்து நடப்பதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட்டில் இருந்து ஜெயங்கொண்டம் வரை பழைய திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் ரூ. 47 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக நெ‌.1 டோல்கேட்டில் இருந்து லால்குடி வரை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பழைய தார் சாலை சுரண்டி பெயர்த்து எடுக்கப்பட்டது. இதையடுத்து, தாளக்குடியில் ஒரு பகுதி மற்றும் மாந்துறை பகுதியில் இருந்து வாளாடி வரை தார்சாலை போடப்பட்டுள்ளது.

தாளக்குடியில் இருந்து லால்குடி ரவுண்டானா வரை தாளக்குடி, வாளாடியில் கிழக்கு மற்றும் மேற்கு, மாந்துறை, ஆங்கரை, லால்குடி ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே சாலையை அகலப்படுத்தி, சாலையின் தெற்கு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல், மாந்துறை டெப்போ பகுதியில் சாலையின் ஒரு பாதியில் தார்ச்சாலை போடப்பட்டு, மறுபாதியில் தார்ச்சாலை போடாமல் விடப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், வாளாடி ஊராட்சியில் ஒரு பாதி போடப்பட்ட சாலையால், டோல்கேட்டில் இருந்து பைக்கில் வீடு திரும்பிய போது, திருமணமேடு கிராமத்தைச் தனியார் நிறுவன ஊழியர் ஜோயல்பிரான்சிஸ் (35) , பைக் மீது தனியார் பஸ் மோதியதில் சம்பவயிடத்திலேயே இறந்தார்.

மேலும், வாளாடி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சாக்கடை கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், வாளாடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் ஆரோக்கியசாமி ஓட்டி வந்த கார் பள்ளத்தில் இறங்கியது. இதை கண்ட பொதுமக்கள் உடனே பள்ளத்தில் இருந்த காரை மீட்டனர். இதில் காயங்கள் ஏதுமின்றி அவர் உயிர் தப்பினார். மேலும், வாளாடி ஊராட்சியில் மழைநீர் வடிகால் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தால், குடிநீர் குழாய்கள் உடைந்த காரணத்தால், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நெ. 1 டோல்கேட்டில் இருந்து லால்குடி வரை தார்ச்சாலை அமைக்கும் பணிகள் முறையாக நடைபெறாததால் தனியார் ஊழியர் விபத்தில் இறந்த‌ நிலையில், மேலும் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க முறையாக தார்ச்சாலை அமைக்க கலெக்டர் பிரதீப்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags

Next Story
ai solutions for small business