விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி பந்தயம் - சீறிபாய்ந்த காளைகள்

விளாத்திகுளம் அருகேயுள்ள புதூரில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில், சீறிபாய்ந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூரில் புதூர் வட்டார மாட்டு வண்டி பந்தய சங்கம் சார்பில், முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் இன்று நடைபெற்றது.

பெரிய மாடு, சின்ன மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி போட்டியில், 60 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. முதலில் பெரிய மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.16 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் 29 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

இதில், முதல் இடத்தை கோவில்பட்டி கடம்பூர் மாட்டு வண்டியும், 2வது இடத்தை மேட்டூர் மாட்டு வண்டியும், 3வது இடத்தை சக்கமாள்புரம் மாட்டு வண்டியும் பெற்றது. இதனை தொடர்ந்து சிறிய மாட்டு வண்டி போட்டிகள் இரு பிரிவுகளாக நடைபெற்றன. 12 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த போட்டியில் முதலில் 16 மாட்டு வண்டிகளும், 2வது நடைபெற்ற போட்டியில் 15 மாட்டு வண்டிகளும் பங்கேற்றன.

முதலில் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில், சிவகங்கை மாவட்ட மாட்டு வண்டி முதலிடம், நெல்லை சீவலப்பேரி மாட்டு வண்டி 2வது இடம், கலிங்கப்பட்டி மாட்டு வண்டி 3வது இடம் பிடித்தன. 2வதாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் விருதுநகர் மாவட்ட மாட்டு வண்டி முதலிடம், 2வது இடம் நெல்லை மறுகால்குறிச்சி மாட்டு வண்டி, 3வது இடம் தூத்துக்குடி குறுக்குசாலை மாட்டு வண்டி பிடித்தன.

சாலையில் சீறிபாய்ந்த மாடுகளை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் வண்டிகளை ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!