துாத்துக்குடியில் காய்கறிகளோடு புகையிலைப்பொருள்கள் கடத்தியவர்கள் கைது.
எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை சோதனைச்சாவடி வழியாக காய்கறி ஏற்றிச்சென்ற மினி லாரியை போலீசார் நிறுத்தியுள்ளனர்.
ஆனால் மினி லாரி நிற்கமால் சென்றுள்ளது. இதனால் சோதனை சாவடியில் இருந்த போலீசார் எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் ஜின்னா பீர் முகம்மது, உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் போலீஸார் எட்டயபுரம் - கோவில்பட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தினர். அப்போது லாரியை நிறுத்தி விட்டு, ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் தப்பியோட முயற்சித்தனர்.
அவர்களை போலீஸார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விளாத்திகுளம் பனையடிபட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த செல்லக்கனி மகன் கண்ணன் (35), மினி லாரி ஓட்டுநர் பனையடிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் பழனிவேல் (31) என்பது தெரியவந்தது. அவர்கள் முன்னுக்கு முரணாக பேசியதால், லாரியை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது அதில் காய்கறி மூடைகளுக்கு கீழ் பகுதியில் 24 சாக்கு மூடைகளில் 420 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.7 லட்சமாகும்.இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தப்பட்ட மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இன்று எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், துரிதமாக செயல்பட்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீஸாரை பாராட்டினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக சோதனைச்சாவடிகளில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் சுமை வாகனங்களை சோதனையிடுவதில்லை.
ஆனால், இந்த மினி லாரி மீது சந்தேகம் ஏற்பட்டதால் சோதனைச்சாவடியில் உள்ள காவலர்கள் எட்டயபுரம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். எட்டயபுரம் போலீஸார் துரிதமாக செயல்பட்டு ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த புகையிலை பொருட்கள் கோவில்பட்டிக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்து பிரித்துக்கொள்வார்கள் என தெரிவித்துள்ளனர். மதுரையில் இருந்து எடுத்து வந்ததாக கூறியுள்ளனர். போதை பொருட்கள் கடத்துவது, விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நான்கரை மாதங்களில் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 43 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த நான்கரை மாதங்களில் 70 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 8 பேர் போதை பொருட்கள் கடத்தியவர்கள், விற்பவர்கள்.புகையிலை பொருட்கள் பெங்களூரூவில் இருந்து கடத்தப்பட்டு வருகிறது. இது சங்கிலி தொடர் போன்றது.
யாரிடமிருந்து யாருக்கு செல்கிறது என்பது, முன்னதாக கடத்துபவர்களுக்கே தெரிவதில்லை. போதை பொருட்களை விற்பனை செய்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்," என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu