திருச்செந்தூர் அருகே இளம்பெண்ணை தாக்கி 21 பவுன் நகைகள் பறிப்பு
கத்தியால் தாக்கப்பட்ட சாந்தி.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காணியாளர்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது கணவர் ராஜ்குமார் ராஜஸ்தானில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சாந்தி அந்தப் பகுதியில் உள்ள வீட்டில் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார்.
இந்தநிலையில் இன்று அந்தப் பகுதியில் முகக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் கேஸ் சிலிண்டர் பழுது நீக்கித் தருவதாகக் கூறி சாந்தியிடம் கேட்டுள்ளார். அதற்கு சாந்தி மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அந்த நபர் அடுத்தடுத்த வீடுகளுக்குச் சென்றுள்ளார்.
தொடர்ந்து வீட்டின் மேல் தளத்திற்கு சென்று சாந்தி வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் சாந்தி மட்டும் வீட்டில் தனியே இருப்பதை அறிந்த மர்மநபர் மீண்டும் சாந்தியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டின் மேல் தளத்திற்கு சென்று சாந்தியிடம் தங்கச் சங்கிலியை கழட்டித் தருமாறும் இல்லையென்றால் கொன்று விடுவதாகக் கூறி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து சாந்தி சத்தம் போட முயற்சித்ததும் கையிலிருந்த கத்தியால் சாந்தியின் கையை வெட்டி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் தாலி சங்கிலி மற்றும் ஐந்து பவுன் செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு வீட்டின் முன்பு நின்றிருந்த இருசக்கர வாகனத்தையும் எடுத்துக் கொண்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடி உள்ளார்.
கையில் ரத்த காயங்களுடன் கீழே வந்த சாந்தியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், சம்பவம் குறித்து ஆறுமுகநேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நிகழ்ந்த சாந்தியின் வீட்டின் அருகேயுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் ஆறுமுகநேரியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu