தூத்துக்குடி மாவட்டத்தில் 26% பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 26 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போட்டுள்ளது என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி பேயன்விளை, பரமன்குறிச்சி, நாசரேத் பேரூராட்சி, குரங்கணி ஆகிய பகுதிகளில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- தமிழக முதல்வர், கொரோனா தொற்று நோயை தமிழகத்தில் முற்றிலும் ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தினமும் சுமார் 9500 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை 10 ஆயிரத்தும் மேற்பட்ட நபர்களுக்கு அதிகப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நமது மாவட்டத்தில் தற்போது 26 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் கொரோனா நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக தடுப்பூசியை போட்டுக்கொள்கின்றனர். தடுப்பூசி நம்முடைய உயிரை காக்கக்கூடியது.
பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா பரவலை தடுத்திட வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும் எவ்வித அச்சமும் இன்றி கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அரசின் ஊரடங்கு விதியை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றி தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருக்க வேண்டும். சுகாதார பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், காயாமொழி குளத்தினை பார்வையிட்டு அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குளத்தினை தூர்வாறி ஆழப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu