இலங்கைக்கு கடத்த முயன்ற 2.10 டன் மஞ்சள் பறிமுதல்; 2பேர் கைது
பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மூட்டைகள்
காயல்பட்டனத்தில் லோடு வேனில் இலங்கைக்கு கடத்தி செல்ல கொண்டு வந்த 2.10 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 மோட்டார் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா, சப் இன்ஸ்பெக்டர்கள், வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், வில்லியம் பென்ஜமின், தலைமை காவலர் இருதய ராஜ்குமார் தலைமையிலான போலீசார் காயல்பட்டனம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஓடக்கரை பகுதியில் வந்த லோடு வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது உரிய ஆவணங்கள் இன்றி 30 கிலோ வீதம் 70 மூடைகளில் 2.10 டன் மஞ்சளை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து லோடு வேனில் வந்த நெல்லை ரைஸ் மில் தெருவைச் சேர்ந்த உடையார் மகன் இசக்கிபாண்டி (38), தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த வைரவன் மகன் ராம்குமார் (28) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மஞ்சள் மூட்டைகள் இலங்கைக்கு கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதனிடையே போலீசார் சுற்றி வளைத்தபோது வேனின் பின்னால் வந்த நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், 2.10 டன் மஞ்சள், கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு வேன், மற்றும் 8 மோட்டார் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu