திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி.ஆய்வு
திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா ஏற்பாடுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விசாகத் திருவிழா இன்று தொடங்கியது. ஜூன் 3 ஆம் தேதி வரை 3 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.
இதில் முக்கிய திருவிழா நாளை (02.06.2023) நடைபெறுவதை முன்னிட்டு, வெளி மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும், கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 5 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 20 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 650-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் வளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம், கடற்கரை பகுதிகள் மற்றும் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) மாயவன், சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த தாண்டவம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் உட்பட போலீசார் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu