திருச்செந்தூரில் பக்தர்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது

திருச்செந்தூரில் பக்தர்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது
X

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களிடம் திருடப்பட்ட நகைகள்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களிடம் தங்க நகைகளை திருடிய 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கீழ தட்டாப்பாறை பகுதியைச் சேர்ந்த ஆத்திமுத்து மனைவி மல்லிகா (60) என்பவர் கடந்த 01.01.2023 அன்று திருச்செந்தூர் கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்துவிட்டு திருச்செந்தூர் கோயில் பேருந்து நிலையத்தில் இருந்தபோது அவரது 3 சவரன் தங்க நகை திருடு போயுள்ளது.


இதேபோன்று, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் வானமாமலை (35) என்பவர் கடந்த 26.01.2023 அன்று திருச்செந்தூர் கோயில் தரிசனத்திற்கு வந்தபோது கோயில் வளாகம் பகுதியில் வைத்து அவரது 10 கிராம் எடையுள்ள தங்கச் செயின் திருடி போயுள்ளது.

மேலும், சாத்தான்குளம் இடைச்சிவிளையைச் சேர்ந்த காசி மகன் முத்துக்குமார் (25) என்பவர் கடந்த 26.01.2023 திருச்செந்தூர் கோயில் தரிசனத்திற்கு வந்தபோது கோயில் வளாகம் பகுதியில் வைத்து அவரது 10 கிராம் எடையுள்ள தங்கச் செயின் திருடு போய் உள்ளது.

நகை திருட்டு குறித்து பாதிக்கப்பட்ட மல்லிகா, வானமாமலை மற்றும் முத்துக்குமார் ஆகியோர் திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மேற்பார்வையில் திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் கனகாபாய் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்படை போலீஸாருக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் சி.சி.டி.வி கேமரா காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருநெல்வேலி பாலபாக்கிய நகரைச் சேர்ந்த பரமசிவம் என்பவரது மனைவி ராமலட்சுமி என்ற பேச்சியம்மாள் (60) மற்றும் திருநெல்வேலி குமரேசன் காலனி சேர்ந்த சண்முகம் மனைவி கல்யாணி என்ற கலா (49) ஆகிய இருவரும் சேர்ந்து நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதைத்தொடர்ந்து, ராமலட்சுமி என்ற பேச்சியம்மாள் மற்றும் கல்யாணி என்ற கலா ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவகளிடம் இருந்த ரூ. 1,70,000 மதிப்புள்ள ஐந்தரை சவரன் தங்க நகைகளையும் போலீஸா்ர பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட எதிரி ராமலெட்சுமி என்ற பேச்சியம்மாள் மீது திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் 5 திருட்டு வழக்குகளும், தென்காசி காவல் நிலையத்தில் 8 திருட்டு வழக்குகளும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும் என 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதேபோல, கல்யாணி என்ற கலா மீது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையத்தில் 6 திருட்டு வழக்குகளும், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், களக்காடு காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும் என 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

Tags

Next Story
ai solutions for small business