கிராம சபை கூட்டத்தில் ராஜினாமா கடிதம் வழங்கிய கவுன்சிலர்.. திருச்செந்தூரில் பரபரப்பு...
கிராம சபை கூட்டத்தின்போது மேல திருச்செந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜாவிடம் ராஜினாமா கடிதத்தை கவுன்சிலர் சுதா வழங்கினார்.
தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, கிராமத்தில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வரவு- செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேபோல, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள மேல திருச்செந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் உட்பட 30- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கிராம சபை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மேல திருச்செந்தூர் ஊராட்சியின் 8 ஆவது வார்டு உறுப்பினரான சுதா தனது வார்டு பகுதியில் ஊராட்சி சார்பில் எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என புகார் தெரிவித்தார்.
மேலும், ஊராட்சி நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்த அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து, கவுன்சிலர் சுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளாளள நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டங்களுக்கு வழங்கப்படும் பணப்படியினையும் ஊராட்சி நிர்வாகம் தரவில்லை. இதுவரை தங்கள் பகுதியில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை.இதுதொடர்பாக பல முறை வலியுறுத்தியும் ஊராட்சி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேல திருச்செந்தூர் ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து 8 ஆவது வார்டு பகுதியை புறக்கணித்து வருகிறது. ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து எனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து உள்ளேன். இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உரிய விசாரணை நடத்தி இதுபோல செயல்பாடமல் இருக்கும் ஊராட்சி நிர்வாகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கவுன்சிலர் சுதா தெரிவித்தார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ஒருவர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu