ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி : ஆட்சியர் துவக்கி வைத்தார்

ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி : ஆட்சியர் துவக்கி வைத்தார்
X

மேலஆத்தூரில் ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.

ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சி துவக்க நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மேலஆத்தூரில் ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சி துவக்க நிகழ்ச்சி இன்று (05.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்: தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதின் அடிப்படையில் ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் பயிற்சியினை தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் பகுதி சுய உதவிக்குழுவில் உள்ள மகளிர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நாபர்டு வங்கியானது ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை நடத்துவதற்கு சிப்போ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் நிறுவப்பட்ட நிறுவனம் ஆகும்.

ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியானது ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 21ம் தேதி வரை 15 நாட்கள் மேல ஆத்தூர் சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் 30 பெண்கள் கலந்து கொண்டு பயனடைய இருக்கின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில்தான் முதன்முறையாக ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் இத்திட்டம் உள்ளது.

இந்த பயிற்சியானது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த பயிற்சி மூலம் ஆகாய தாமரையை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதனை விற்றுக்கொடுப்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை ஆகும். மதிப்பு கூட்டப்பட்ட பொருளை நல்ல விலைக்கு விற்று உங்களுக்கு வருமானம் பெறுவதற்கான மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆகாய தாமரையின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதன் மூலம் தெற்கு ஆத்தூரில் ஆகாய தாமரை இல்லாத குளமாக மாறும். இதன் மூலம் மகளிர்கள் தங்களது வருமானத்தை பெருக்கி வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் பிச்சை, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் சிவகாமி, சிப்போ நிறுவனத்தின் பொது மேலாளர் பழனிவேல், தூத்துக்குடி நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுரேஷ்ராமலிங்கம், திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி முதன்மை வங்கி மேலாளர் துரைராஜ், ஸ்டேட் பேங்க் முதன்மை மேலாளர் பாலசுப்பிரமணியன், கனரா பேங்க் உதவி பொது மேலாளர் சின.எஸ்.தேவ், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி துணை பொது மேலாளர் மணிமாறன், தமிழக அரசு புத்தாக்க பயிற்சி திட்டம் திட்ட அலுவலர் முத்தமிழ்செல்வி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்களின் உயர்தர மருத்துவ சேவைக்கான முன்முயற்சி - நாமக்கல் ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்