குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் துவங்கியது
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. திருவிழாவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் விரதம் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இந்நிலையில், தற்போது கொரோனா 3வது அலை காரணமாக ஏற்ப்பட்டுள்ள அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு போல் இந்த அண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இன்று தொடங்கி தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு கோலத்தில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவிலில் வலம் வருகிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 15-ம் தேதி நள்ளிரவில் நடைபெறுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் சூரசம்ஹாரம் கடற்கரைக்கு பதிலாக கோவில் வளாகம் முன்பு நடைபெறுகிறது. இதை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவிழா நடைபெறும் 12 நாட்களில் வருகிற 7, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும், திருவிழா நடைபெறும் 12 நாட்களில் 5 தினங்கள் மட்டுமே பக்தாகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவிழாவில் தடை செய்யப்பட்ட 7 நாட்களும் பக்தர்கள் யாரும் கோவில் வளாகம் மற்றும் கோவில் சுற்றுப்புற பகுதியில் நடமாடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu