ஊருக்குள் புகுந்த கடமான்.. கயிறு கட்டி பிடிக்க முயன்றதால் இறப்பு... வனத்துறை ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்டு..
உயிரிழந்த கடமான்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி மற்றும் குலசேகரன்பட்டினம், தருவைகுளம் ஆகிய பகுதியில் ஏராளமான காட்டு மாடுகள், மான்கள் வசித்து வருகின்றன. கோடைக்காலத்தில் அந்த விலங்குகள் இரவு நேரங்களில் உடன்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருக்களில் வலம் வருவது வழக்கம்.
உடன்குடி அருகே தற்போது அனல் மின்நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், காட்டு மாடுகள், மான்கள் ஊருக்குள் வந்துச் செல்வது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில், மான் வகையைச் சேர்ந்த கடமான் என அழைக்கப்படும் மிளா ஒன்று உடன்குடி கடைவீதி பகுதிக்குள் நேற்று இரவு நுழைந்தது.
அதைக் கண்ட வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திருச்செந்தூர் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். சிறிது நேரத்தில் அந்த கடமான் அங்குள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் சென்றது. இதையெடுத்து, அந்தப் பகுதியில் இருந்து கடமான் வெளியேறாதப்படி தடுப்பு வைத்து பொதுமக்கள் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறையினர் கயிற்றை பயன்படுத்தி சுருக்கு கயிறு போட்டு கடமானை பிடிக்க முயன்றனர். பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் அதிகம் கூடியிருந்ததால் அவர்களை கண்ட கடமான் அங்கும் இங்குமாக மிரண்டு ஓடியது. இருப்பினும், கடமானை எப்படியாவது பிடித்தாக வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட வனத்துறையினர் ஒரு முட்டு சந்து பகுதியில் நின்ற கடமானில் கழுத்தில் சுருக்கு கயிறை மாட்டினர். அப்போது பயத்தில் கடமான் அங்கும் இங்கும் ஓடியதால், அதன் கழுத்தில் சிக்கிய கயிறு இறுகியதில் கடமான் மயங்கி கீழே விழுந்தது.
இதைத்தொடர்ந்து, மயங்கி விழுந்த கடமானை மீட்ட வனத்துறையினர் திருச்செந்தூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனை செல்வதற்குள் கடமான் பரிதாபமாக உயிரிழந்தது. ஊருக்குள் புகுந்த கடமானை வனத்துறையினர் சுருக்கு கயிறு போட்டு பிடித்ததால் தான் கழுத்தில் இறுகி உயிரிழந்துவிட்டதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
வனத்துறையினர் 3 பேர் சஸ்பெண்டு: உடன்குடியில் ஊருக்குள் புகுந்த கடமான் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வேகமாக பரவியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜியிடமும் பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, கடமான் இறந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்படி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமருக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டதில் வனத்துறையினரின் கவனக்குறைவாக செயல்பட்டதாக தெரியவந்தது.
இதையெடுத்து, கடமானை பிடிக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் வனவர் ஆனந்த், வனக்காப்பாளர் கந்தசாமி, வன காவலர் ஜோஷ்வா ஆகிய மூவரையும் சஸ்பெண்டு செய்து மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu