திருச்செந்தூர் கோயிலில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை மீட்பு

திருச்செந்தூர் கோயிலில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை மீட்பு
X

போலீசார் ஒப்படைத்த குழந்தையை கண்ணீருடன் கட்டித் தழுவிய பெற்றோர்.

திருச்செந்தூர் கோயிலில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையை சேலத்தில் மீட்ட போலீசார் அந்தக் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் மணவாளபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் (32). கட்டியத் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி ரதி என்ற மனைவியும், ராஜசேகர், ராஜேஸ்வரி, ஸ்ரீ ஹரிஷ் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி முத்துராஜ் தனது மனைவி ரதி மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஸ்ரீஹரிஷ் ஆகியோருடன் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு வந்துள்ளார்.

அங்கு முத்துராஜ், ரதி மாலை அணிவித்து கோயில் வளாகத்தில் தங்கி விரதம் இருந்து வந்துள்ளனர். அப்போது அவர்களுடன் ஒரு பெண்ணும், ஆணும் நன்றாக பேசி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி காலையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு முத்துராஜ் குடும்பத்துடன் வந்துள்ளார். அவர்களுடன் அந்தப் பெண்ணும் வந்துள்ளார்.

இந்த நிலையில் கோயில் வளாகத்தில் உள்ள சுகாதார வளாகத்தில் ரதி துணி துவைத்து கொண்டிருந்துள்ளார். முத்துராஜ் சோப்பு வாங்க கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண் குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பதாக ரதியிடம் சொல்லிவிட்டு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் குழந்தையை காணாததால், ரதி இதுகுறித்து திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தை தேடி வந்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் குழந்தையை ஒரு ஆணும் பெண்ணும் பைக்கில் கடத்திச் சென்ற காட்சியை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் குழந்தையை நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த திலகவதி (35), சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பாண்டியன் (45) ஆகியோர் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையெடுத்து, திலகவதி மற்றும் பாண்டியனை கோவையில் வைத்து போலீசார் நேற்று கைது செய்தனர்.

இருவரையும் கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில், திடீரென திலகவதி மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில் கடத்தப்பட்ட குழந்தை சேலம் மாவட்டம் ஆத்தூரில் பாண்டியன் வீட்டில் இருந்தது.

இதனையடுத்து குழந்தையை மீட்டு போலீசார் இன்று திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கண்ணீர் மல்க குழந்தையை பெற்றோர் கட்டித்தழுவி கொஞ்சியது பார்ப்போரை கண் கலங்கச் செய்தது. மேலும் குழந்தையின் தாயார் காவல்துறையினருக்கு கைகூப்பி நன்றியை தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!