திருச்செந்தூரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: குறவன் வேடமிட்டு பெற்றோர் விரதம்
திருச்செந்தூர் கோயில் பகுதியில் வேடமணிந்த குழந்தையுடன் தர்மம் பெற்ற தம்பதி.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் மணவாளபுரத்தை சேர்ந்த முத்துராஜ்- ரதி தம்பதியினர் குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு, கடந்த மாதம் மாலை அணிவிப்பதற்காக வந்தனர். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் அவர்கள் குடும்பத்துடன் தங்கினர். அப்போது, கோயிலில் வைத்து அவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை ஸ்ரீ ஹரீஷ் திடீரென காணாமல் போனான்.
இதுதொடர்பாக கோயில் காவல் நிலையத்தில் முத்துராஜ் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, போலீசார் கோயில் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் குழந்தை ஸ்ரீ ஹரீஷை ஒரு ஆணும், ஒரு பெண்ணும் கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையெடுத்து, கடத்தப்பட்டு 5 நாட்களுக்கு பின் சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து ஸ்ரீ ஹரீஷ் மீட்கப்பட்டான். முத்துராஜ்- ரதி தம்பதியினரிடம் பக்தர் போல பழகி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த திலகவதி என்ற பெண் குழந்தையை கடத்திச்சென்றது தெரியவந்தது. இந்தநிலையில் குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தற்போது தசரா திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் காணாமல் போன குழந்தை ஸ்ரீ ஹரீஷ் மீண்டும் கிடைத்ததைத் தொடர்ந்து, அந்த குழந்தைக்கு குறவன் வேடமணிந்தும் , மடிப்பிச்சை எடுத்தும் காணிக்கை பெற்று பெற்றோர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர். குழந்தை ஸ்ரீஹரீஷ் காணாமல் போன போது குழந்தை கிடைக்க வேண்டும் என அம்பாளிடம் வேண்டுதல் வைத்ததாகவும் அம்பாளின் அருளினால் தங்களது குழந்தை மீண்டும் கிடைத்ததாகவும் முத்துராஜியும், ரதியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu