திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழா: கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு

திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழா: கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு
X

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, நவம்பர் 18 ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள் முருகன், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அன்புமணி, கோயில் இணை ஆணையர் கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டும்மல்லாமல் பல நாடுகளில் இருந்து மக்கள் வருகைதந்து பங்கேற்கக்கூடிய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு ஏறத்தாழ 10 லட்சம் மக்கள் கந்த சஷ்டி திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரைக்கும் சுமார் 3 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வந்து சென்று உள்ளார்கள். அன்னதானக் கூடத்திலே இதுவரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேல் பக்தர்கள் உணவு அருந்திருக்கிறார்கள். கந்த சஷ்டி திருவிழாவில் வருகைதரும் பக்தர்கள் தங்குவதற்காக 22 தற்காலிக பந்தல்கள் போடப்பட்டிருக்கிறது.

70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நிரந்தர பந்தல் உள்ளது. ஆண்களுக்காக 225 கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக 240 கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இருபலர்களுக்கும் தனித்தனியாக 14 குளியல் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. 200 இடங்களில் குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 5 லட்சம் லிட்டர் தண்ணீர் வருகைதரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 13 இடங்களில் வாகனங்கள் நிறுத்திமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி திருவிழாவிற்கு வருகைதரும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் கோவிலுக்குள் செல்வதற்கு வசதியாக கூடுதலாக 3 பேட்டரி வாகனங்கள் வழங்கப்படவுள்ளது.

தொடர்ந்து, மருத்துவ முகாம், பெண்கள் சஷ்டி விரதம் இருக்கும் இடம், அன்னதானக்கூடம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டபோது, பக்தர்கள் எங்களிடம் கூறும் போது சஷ்டி ஏற்பாடு மிகச்சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்று மகிழ்ச்சியோடு கூறினார்கள். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தர்ம தரிசனம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. பக்தர்கள் கோவில் சன்னதிக்கு வந்து சென்றுதான் இருக்கிறார்கள். அது நிறுத்தப்படவே இல்லை.

அதுமட்டும்மல்லாமல், கந்த சஷ்டி திருவிழாவிற்கு வருகைதரும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய தனியாக வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. திருவிழா அபிஷேக கட்டணம் 200 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாகவும், திருவிழா விஸ்வரூபத்திற்கான கட்டணம் 500 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாகவும், கந்த சஷ்டி திருவிழா மற்றும் அபிஷேக கட்டணம் 500 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது 2018 ஆம் ஆண்டு.

ஆகையால், அப்போது இருந்து இதே கட்டணம் தான் நடைமுறையில் உள்ளது. கந்த சஷ்டி திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் ஏற்பாடு எல்லாம் சிறப்பாக உள்ளது, உணவு சிறப்பாக உள்ளது என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் கிட்டதட்ட 11 லட்சம் சதுர அடி பரப்பிளலான பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, 6 இலட்சம் சதுர அடி பரப்பிளவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தப் பணிகள் எல்லாம் முடிந்து இன்னும் சுலபமாக மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும். அப்பொழுது தரிசனத்திற்கான கட்டணங்கள் எல்லாம் முறையாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!