திருச்செந்தூரில் பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி- கருத்தரங்கம்

உலக பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பேரணி நடைபெற்றது.

உலக பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் திருச்செந்தூர் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவும் இணைந்து உலக பெண் குழந்தைகள் தின விழா திருச்செந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து கொண்டாடப்பட்டது.

நிகழ்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் செல்வி பிளாரன்ஸ் வரவேற்றார். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் கண்மணி, நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் கங்கா ரோகிணி ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசய ராஜா குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பேசினார். குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி துவக்கி வைத்தார். பேரணியானது திருச்செந்தூர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

நிகழ்ச்சியில், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினருமான கென்னடி, லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் பானுமதி, திருச்செந்தூர் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், வார்டு கவுன்சிலர்கள், காவல் துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக நகராட்சி பணியாளர்‌ ராஜலட்சுமி நன்றி கூறினார்.

Tags

Next Story