திருச்செந்தூர் பகுதியில் தொடர் மழை: மரப்பாலம் உடைந்ததால் விவசாயிகள் பாதிப்பு
திருச்செந்தூர் ராணிமகாராஜபுரத்தில் மழையால் சேதமடைந்த மரப்பாலம்.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருச்செந்தூர் அருகே மரப்பாலம் உடைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகாராஜபுரத்தில் அடைக்கலாபுரம், நத்தைகுளம், கோயில்விளை, வீரபாண்டியன்பட்டனம் ஆகிய பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு சுமார் 600 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. நாலாயிரமுடையார்குளம் பாசனம் மூலம் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த விவசாய நிலத்திற்கு செல்வதற்கு நாலாயிரமுடையார்குளம் உபரி நீர் வடிகால் வாய்க்காலை கடந்து தான் செல்லவேண்டும். இதற்கு விவசாயிகளின் சொந்த செலவில் மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பருவ மழையால் வாய்க்காலில் அதிக தண்ணீர் செல்வதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த மரப்பாலம் சேதமடைந்து வந்துள்ளது. இதனால் தொடர்ந்து 50 ஆண்டுகளாக மழை காலத்தில் பழுதடைந்த பாலத்தை மீண்டும் தங்கள் சொந்த செலவில் சீரமைத்து அந்த வழியாக சென்று விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இதனால் அதிக செலவு ஏற்படுவதால் நாளடைவில் அந்த விளைநிலத்தில் விவசாயம் செய்வது குறைந்து வந்துள்ளது.
சுமார் 600 ஏக்கர் விளை நிலத்தில் தற்போது 300 ஏக்கரில் தான் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் பாலம் அமைத்து தரக்கோரி தொடர்ந்து 50 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு விளை நிலத்தை உழுது விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கினர். ஆனால் இந்த மரப்பாலம் உடைந்து விழுந்ததால் விவசாயிகள் விவசாய பணியை தொடங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்த இடத்தில் பாலம் அமைத்து தரக் கோரி 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அரசு போர்க்கால அடிப்படையில் பாலம் அமைத்து தர விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu