திருச்செந்தூர் மாசிதிருவிழா வழிகாட்டு நெறிமுறைகள்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவை கோவிட் 19 நடைமுறைகளை பின்பற்றி நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா இன்று (17 ம் தேதி) முதல் 28.02.2021 வரை கொண்டாடுதல் தொடர்பான முன்னேற்பாடுகள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கோவிட்-19 ஊரடங்கு நடப்பில் உள்ள நிலையில் திருக்கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் வழங்கப்பட்டுள்ள நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் நடத்துதல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்.
மாசித் திருவிழா நிகழ்ச்சியில் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டு சுவாமி புறப்பாடு மற்றும் தேரோட்டம் ஆகியன திருக்கோயிலுக்கு வெளியில் நடைபெற உள்ளது. 5-ம் திருநாள் அன்று இரவு 7:30 மணியளவில் குடைவரை வாயில் தீபாராதனை நிகழ்ச்சியில் சுமார் 1000 பக்தர்கள் நிகழ்ச்சியைக் காண அனுமதிக்கப்படுவர்.
7-ம் திருநாள் (23 ம் தேதி) அன்று அதிகாலை 4.30 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ள உருகு சட்ட சேவை மற்றும் காலை 8.30 மணியளவில் நடைபெறும் வெற்றிவேல் சப்பரம் எழுந்திருப்பு (ஏற்றம் காணல்) ஆகிய நிகழ்ச்சிகளைக் காண 1000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் சிவப்பு சாத்தி நிகழ்ச்சியில் சுமார் 500 பக்தர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்பட வேண்டும். 8-ம் திருநாள் (24 ம் தேதி) அன்று பகல் 11.30 மணிக்கு நடைபெறும் பச்சை சாத்தி நிகழ்ச்சியில் சுமார் 1000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். 10-ம் திருநாள் (26 ம் தேதி) காலை 7 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சியில் சுமார் 1000 பக்தர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்பட வேண்டும்.
திருக்கோவில் நிர்வாகத்தின் மூலம் மாசித் திருவிழா நிகழ்ச்சிகளை காண வரும் மற்றும் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். பக்தர்கள் கை கழுவுவதற்கான வசதியும், சானிடைசர் வசதியும் எற்படுத்தி தர வேண்டும். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அந்தந்த துறைகளின் மூலம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். திருக்கோயில் மூலமாக அன்னதானம் பார்சல் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும்.மேற்கண்ட ஏற்பாடுகளுடன் கோவிட்-19 பாதுகாப்பினை பின்பற்றி திருச்செந்தூர் கோயில் மாசித் திருவிழா நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu