திருச்செந்தூர் பகுதியில் கனமழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
நாலுமாவடியிலிருந்து மேலப்புதுக்குடி செல்லும் வாலசுப்பிரமணியபுரம் பகுதியில் கனமழையால் நெற்பயிர்கள் முழுவதும் சரிந்து கிடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் பகுதி முழுவதும் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு நெல் மற்றும் வாழை பயிரிடப்பட்டு வருகிறது. இந்த பகுதி முழுவதும் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இந்த பகுதி குளத்து பாசனம் என்பதால் இங்கு எப்போதும் விவசாயம் நடந்து கொண்டே இருக்கும். இதனால் குரும்பூரை சுற்றியுள்ள பகுதி முழுவதும் எப்போதும் பச்சைப்பேசல் என்று காணப்படும்.
வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்ததால் இங்குள்ள குளங்கள் நிரம்பி காணப்படுகிறது. தற்போதும் குளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன் விவசாயிகள் விவசாய பணிகளை துவங்கினர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து உள்ளனர். நெற்பயிர்கள் அனைத்தும் கதிர்விட்ட நிலையில் சில நாட்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தன.
இந்நிலையில் நேற்று அதிகாலை திருச்செந்தூர் மற்றும் குரும்பூர் பகுதியில் பெய்த கனமழையால் கதிர்விட்ட நெற்பயிர்கள் அனைத்தும் சரிந்தன. சில மணி நேரம் காற்றுடன் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இது விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கேட்டபோது, ஏற்கனவே கடனில் உள்ளோம். தற்போதும் கடன் வாங்கிதான் பயிரிட்டோம். அறுவடைக்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் நேரத்தில் மழை வந்து எங்கள் பயிரை முழுவதும் சேதப்படுத்திவிட்டது. எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்து விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu