புரோட்டா நகரமாக மாறுகிறதா திருச்செந்தூர்..?

புரோட்டா நகரமாக மாறுகிறதா திருச்செந்தூர்..?
X

திருசெந்தூர் பரோட்டா கடை - கோப்புப்படம் 

இங்க குழாய தொறந்தா தண்ணி வராது, புரோட்டா சால்னாவும் , சுக்காவும் தான் வரும்.

அட திருச்செந்தூர் முருகன் கோயில் ரொம்ப பிரபலமாச்சேனு நீங்க முனங்குறது சரிதான். அண்ணனுக்கு 4 புரோட்டா, ஒரு ஆம்லெட், சுக்கானு திரும்புற பக்கமெல்லாம் ஆர்டர் சொல்லுற அளவுக்கு, ஆன்மிக நகரம் திருச்செந்தூர் இப்ப புரோட்டா நகரமாக மாறிடுச்சு.

ஊருக்குள்ள எந்தப் பக்கம் திரும்புனாலும் புரோட்டா கடைதான். அட முருகன் கோவிலை சுத்தி கூட இப்ப புரோட்டா கடைங்க வந்திடுச்சு. முட்டை, சுக்கா, சிக்கன், புரோட்டானு அமோக வியாபாரம். என்னது திருச்செந்தூரா இப்படி ஆயிடுச்சு..? அது முருகன் கோவில் இருக்குற புனித ஸ்தலமாச்சேனு உங்களுக்கு கேக்கலாம்னு தோணுதா..?

தாராளமா கேளுங்க..

அதைப்பத்தி யாருக்கும் எந்த கவலையும் இல்லை. அதெல்லாம் காதுலயே வாங்க மாட்டோம் நாங்க. எங்களுக்கு தேவை புரோட்டா, சுக்கா, ஆம்லெட், சிக்கன் மட்டும் தான். மத்தபடி முருகனை பத்தி அக்கறையெல்லாம் எங்களுக்கு இல்லை.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து போற ஊராச்சேப்பா. அவங்களுக்கு அடிப்படை வசதிகள் உங்க ஊர்ல இருக்கா? கழிப்பிடங்கள் இருக்கா? நல்ல தரமான சாலைகள் இருக்கானு நீங்க கேக்குறது புரியுது..

அதெல்லாம் யாருக்கு வேணும்? வந்தோமா , சாமிய கும்பிட்டோமா, சால்னாவ ஊத்தி புரோட்டாவ தின்னோமான்னு இருந்தா பக்தர்கள் ஜாலியா இருக்கலாம்.

அதுவும் நைட்டு பத்து மணிக்கு மேல எல்லாம், எல்லா புரோட்டா கடை வாசல்லயும் மிருதன் பட ஜெயம் ரவி மாதிரி புரோட்டா பிரியர்கள் கூட்டம் கூட்டமா நிக்குறதை பார்க்கலாம்.

சரி எப்படியோ போங்க.. அந்த கோயில் பகுதியை கொஞ்சம் நல்ல சுத்தமா வச்சிக்கலாம்னு நீங்க கேக்குறது எனக்கு காதுல கேக்குது... அதெல்லாம் நாங்க யாருமே, எதுவுமே நினைக்கவும் மாட்டோம்.. (சிலர் மட்டும் ஊர், தண்ணீர், சாலை, கோயில் மற்றும் அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகின்றனர். )

அறநிலையத்துறையே அசால்ட்டா தூங்குறப்ப எங்களுக்கு என்ன அக்கறை..?

ஏன்னா , நமக்கு தேவை புரோட்டா சால்னா சாப்பிடணும், நல்லா வியாபாரம் ஆகணும், நாலு காசு பார்க்கணும் அவ்வளவுதான். நாடி, நரம்பு , ரத்தம், சதை எல்லாம் புரோட்டா சால்னா வெறி ஊறிப் போனவங்க நாங்க. மதியம் 12 மணிக்கு புரோட்டா கடை ஆரம்பிச்சதும், ஆட்டோக்கார மாணிக்கம் மாதிரி சாஃப்ட்டா சாப்பிட ஆரம்பிப்போம்.. நைட்டு எட்டு மணிக்கு மேல் எல்லாம் பயங்கரமான மாணிக்பாட்ஷாவா மாறிடுவோம்.

அப்படின்னா திருச்செந்தூர் நல்ல டெவலப் ஆயிடுச்சானு நீங்க நினைக்கலாம். ஆமா, ஒவ்வொரு நாளும் புரோட்டா கடை வியாபாரம் டெவலப் ஆகுதுல்ல இது போதாதா. திருச்செந்தூர் டெவலப் ஆயிடும்.

நம்ம ஊர் மக்கள்கிட்ட சொல்லிக்க விரும்புறது ஒண்ணே ஒண்ணுதான். திருச்செந்தூர் ஒரு ஆன்மிக நகரம். நம்ம சக்கரவர்த்தி முருகன் ஒத்தையாளா நின்னு நம்ம ஊருக்கு படி அளக்குறாரு. அவருக்கான குறைஞ்சபட்ச மரியாதையாவது நாம கொடுக்கணும். ஊருக்குள்ள வர்ற பக்தர்களுக்கு , கோவிலுக்குள்ள நுழைஞ்ச உணர்வு வரணும். அதை விட்டுட்டு, புரோட்டா சால்னா திங்கணும்னு எண்ணம் வரக்கூடாது. பரோட்டா சூரிகள் ஊருக்குள் பெருகுவது, ஊரின் ஆன்மிகப் பெயருக்கு பேராபத்து. நான் சொல்லுறது உங்களுக்கு அதிகப்படியா தோணுச்சுன்னா. ஒரு தடவை ஸ்ரீரங்கம் போயிட்டு வாங்க.. உங்களுக்கு புரியும். நம்ம ஊரு மக்கள் நல்லா சாப்பிட்டு, நல்லா வாழணும். அதுக்கு நம்ம சக்கரவர்த்தி முருகன் அருள் உண்டு. நம்ம ஊர் வியாபாரிகள் நல்லபடியா வாழுறதுக்கும் நம்ம முருகன் படி அளப்பார்.

ஆனா, தினமும் சாப்பிடுறதுல காட்டுற ஆர்வம், அக்கறையை நம்ம ஊர் மேலேயும் காட்டுனா நம்ம ஊருக்கு பெருமை .. நமக்கும் பெருமை.

ஒரு கடையில வேலை பார்க்குற பையன் , அண்ணே, நம்ம ஊருக்கு எவ்வளவு கூட்டம் வருது பாருங்கணே.. திருச்செந்தூர் சரியான டெவலப் ஆயிடுச்சுனு சொன்னான். அவனுக்குஎப்படி புரிய வைப்பது?

டெவலப் ஆகுறதுன்னா வெறும் கூட்டம் மட்டும் இல்லடா தம்பி, நம்ம ஊருக்கு வர்ற பக்தர்களுக்கு எல்லா அடிப்படை வசதிகளையும் செஞ்சு கொடுக்குறதும், நம்ம ஊரோட உள் கட்டுமானங்களை சிறப்பா மாத்துறதுக்கும் பேருதான் டெவலப்னு அவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது?

நீங்க இனி புரோட்டா சாப்பிடுறப்ப , நான் சொன்னதையும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க. மாற்றம் நிச்சயம் வரும்..!

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!