தூத்துக்குடியில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 19.40 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்களின் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அதாவது, திருமண நிதியுதவி வழங்கும் திட்டம், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம், இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், சுயதொழில் தொடங்க மானியத்துடன்கூடிய வங்கிக் கடனுதவி மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், இலவச திறன்பேசி, தையல் இயந்திரம், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், காதொலி கருவி, ஒளிரும் மடக்கு குச்சி, பிரெய்லி வாட்ச் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 16.70 லட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 20 பார்வையற்ற மற்றும் காதுகேளாதோர்களுக்கு ரூ. 2.70 லட்சம் மதிப்பிலான இலவச திறன்பேசிகளும் வழங்கப்பட்டன என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பாலகுருசாமி, தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu