தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டி கிராம மக்கள் மனு
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக்கள்.
வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த ஆலையால் தூத்துக்குடி மாவட்டத்தில் மாசு பாதிக்கப்படுவதாகவும், புற்றுநோய் பரவுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 2 பேர் சில நாட்கள் கழித்து இறந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது. இதையெடுத்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு 2018 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி சீல் வைத்தது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 15 பேர் உயிரிழந்தது பற்றி நீதி விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழுவின் அறிக்கை சமீபத்தில் தான் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு குழு சிபாரிசு செய்ததன் அடிப்படையில் துப்பாக்கி சூட்டிற்கு காரணமான சில அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
இதற்கிடையே, வேலைவாய்ப்பு காரணத்துக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரு தரப்பினும், ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என ஒரு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் பலர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள சங்கரப்பேரி, மீளவிட்டான், மடத்தூர், தெற்கு வீரபாண்டியபுரம், அய்யனடைப்பு, சோரீஸ்புரம், சில்லாநத்தம், தெற்கு சிலுக்கான்பட்டி,சில்வர் புரம், புதூர் பாண்டியாபுரம் ஆகிய கிராம மக்கள் மற்றும் மட்டகடை, திரேஸ்புரம், பூபாலராயர்புரம், லூர்தம்மாள்புரம், அன்னை தெரசா மீனவர் காலனி, லயன்ஸ்டவுன், அலங்காரத்தட்டு ஆகிய கடலோர பகுதிவாழ் மக்களும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொறுப்பு வகித்த மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரானிடம் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அளித்த மனு விவரம் வருமாறு:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் மாசு இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொண்டுள்ளோம். தூத்துக்குடியில் வாகன புகை, சாலையோர புழுதியால்தான் தான் மாசு ஏற்படுகிறது என்பதை உணர்ந்துள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையால் தான் புற்றுநோய் வருகிறது என பொய்யான வதந்திகளை பரப்பியதால் இந்த ஆலை மூடப்பட்டு நான்கரை ஆண்டுகள் ஆகிறது. இதனால் பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். இன்னும் வருங்கால சந்ததியினர் வேலைவாய்ப்பை பெற வேண்டுமானால் ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட வேண்டும். தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் கல்வி பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிப்பட்டுள்ளது.
மனு அளித்தபின் கிராம மக்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள் மட்டுமின்றி மேலும் பல இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறமுடியும் என்றனர்.
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நீண்டகாலமாக சட்ட போராட்டம் நடத்தினார். அந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் மனிதர்கள் மட்டும் இன்றி விலங்குகள் போன்ற உயிரினங்களும் எப்படி பாதிக்கப்படுகின்றன என கூறி அவர் நீதிமன்றங்களில் தானே நேரில் ஆஜராகி வாதாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் மீண்டும் அது பெரிய சட்ட போராட்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu