தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய போலீஸார் ரோந்து: 886 வழக்குகள் பதிவு
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேற்று (07.04.2022) இரவு மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை செய்ய உத்தரவிட்டார்.
மேலும், தங்கும் விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா? என சோதனையிடவும், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், வங்கிகள், ஏடிஎம் மையங்கள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள் உட்பட முக்கிய இடங்களை கண்காணிக்கவும், பழைய ரவுடிகளை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்தல் போன்ற பல்வேறு தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்ள மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டு இருந்தார்.
அவரது உத்தரவின்பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் இரவு முழுவதும் விடிய, விடிய தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் பழைய கொலை வழக்கு குற்றவாளிகள் 174 பேர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் தற்போதைய இருப்பிடம் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் தணிக்கை செய்ய்பட்டுள்ளது.
இது தவிர 32 ரவுடிகள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 8 குற்றவாளிகளை கைது செய்தும், 18 சந்தேக நபர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 145 தங்கும் விடுதிகளில் காவல் துறையினர் சோதனையிட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஏடிஎம் மையங்கள், நகைக்கடைகள் உட்பட முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன சோதனையில் 1825 வாகனங்கள் சோதனையிடப்பட்டு அதில் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் உட்பட மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக 859 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்ததாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 27 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
மேலும், மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu