தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்: எஸ்பி பங்கேற்பு

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்: எஸ்பி பங்கேற்பு
X

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி இன்று (23.10.2021) தூத்துக்குடி 3வது மைல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பதார்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இம்முகாமில் கலந்து கொண்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சி குறித்து சமூக ஆர்வலர் அழகர் செந்தில் கலந்துகொண்டு காவலர்களுக்கு பயிற்சி அளித்தார். அப்போது எஸ்பி பேசுகையில், கரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்கு மாற்று வழி தடுப்பூசிதான். இந்த தடுப்பூசி தான் நம்மை பாதுகாக்கும் கவசம். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்பது அரசின் நோக்கம், தடுப்பூசி போட்டவர்களுக்கு அவ்வளவு சீக்கிரமாக கொரோனா தொற்று வருவதில்லை,

அப்படியே தடுப்பூசி போட்டவர்களுக்கு வந்தால் கூட உயிரிழப்பு ஏற்படுவதில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி போடாத அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் காவல்துறையினரின் பல்வேறு பணிகளின் காரணமாகவும், பண்டிகை நாட்களில் கூட காவல்துறையினர் குடும்பத்தினருடன் இருக்க முடியாத சூழலில் பணியாற்றி வருவதாலும், நாம் பண்டிகை காலங்களில் கூட குடும்பத்துடன் இருக்க முடியவில்லையே என்று எண்ணி கூட மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே காவலர்கள் இந்த மனஅழுத்த பயிற்சி முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த சிறப்பு முகாமின் போது தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பளார் இளங்கோவன், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளர்கள் மணிகன்டன், செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!