தூத்துக்குடி மாவட்ட அரசு ஐடிஐ-களில் ஜூலை 10 இல் நேரடி மாணவர் சேர்க்கை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).
தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவ, மாணவிகளுக்கான நேரடி சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐ-களில் ஜூலை 10 ஆம் தேதி நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 24.05.2023 முதல் 20.06.2023 வரை மாணவர்களிடம் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தற்போது ஐடிஐ சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதுவரை ஐடிஐ சேர்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் 10.07.2023 அன்று நடைபெற இருக்கும் நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ள விரும்புவோர் 8 ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் இரு நகல்களுடன் சேர விரும்பும் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று சேர்க்கையை உறுதி செய்யலாம்.
மேலும், அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் வருகைக்கேற்ப உதவித்தொகை ரூ.750 கட்டணமில்லா பஸ் பாஸ், இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்குத் தேவையான விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
எனவே, இதுவரை ஐடிஐ-யில் விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நேரடியாக தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu