செல்போனுக்கு வந்த பரிசு அறிவிப்பு.. ரூ. 4.38 லட்சத்தை இழந்த தூத்துக்குடி வியாபாரி…

செல்போனுக்கு வந்த பரிசு அறிவிப்பு.. ரூ. 4.38 லட்சத்தை இழந்த தூத்துக்குடி வியாபாரி…
X

ஜோன்ஸிடம் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பணத்தை ஒப்படைத்தார்.

செல்போனுக்கு வந்த பரிசு அறிவிப்பை உண்மை என நினைத்து 4.38 லட்சம் ரூபாய் ஏமாந்த தூத்துக்குடி வியாபாரியின் பணத்தை போலீஸார் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகைரச் சேர்ந்தவர் ஜோன்ஸ். இவருடைய வங்கி கணக்கு முடக்கம் செய்யப்ட்டுள்ளதாகவும், அதை சரிசெய்ய KYC Update செய்ய வேண்டும் என்று கூறி அவருடைய செல்போனுக்கு லிங்க்குடன் குறுஞ்செய்தி வந்துள்ளது.

அந்த லிங்க்-யை கிளிக் செய்து ஜோன்ஸ் தன்னுடைய இன்டெர்நெட் பேங்கிங் பயனாளர் பெயர் (Username), கடவுச்சொல் (Password) மற்றும் OTP ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவருடைய வங்கிகணக்கில் இருந்து ரூ. 1,24,500 பணம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜோன்ஸ் National cybercrime Portal என்ற சைபர் கிரைம் இணைய தள முகவரியில் புகார் பதிவு செய்துள்ளார்.

இதே போன்று தூத்துக்குடியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு அமேசானில் பரிசு பொருள் விழுந்துள்ளதாக அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த பரிசை பெறுவதற்கு ரூ. 25,000/- பணம் செலுத்த வேண்டும் என்று கூறி credit card மூலம் பணம் செலுத்த ஒரு லிங்கை அனுப்பியுள்ளார்.

அந்த லிங்கை கிளிக் செய்து அவர் தனது credit card எண்ணையும், செல்போனுக்கு வந்த OTP விவரத்தையும் கொடுத்துள்ளார். இதனையடுத்து அவருடைய credit card-இல் இருந்து ரூ. 4,38,238 பணம் மோசடியாக எடுக்கப்பட்டது. இதுகுறித்து அவரும் National cybercrime Portal என்ற சைபர் கிரைம் இணைய தள முகவரியில் புகார் பதிவு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இருவர் அளித்த புகார்களின் அடிப்படையில், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழக்கில் ஜோன்ஸ் என்பவர் இழந்த பணம் அவருடைய வங்கி மூலம் Flipkart இணையதளத்தில் பொருட்கள் கொள்முதல் செய்திருப்பது கண்டறியப்பட்டு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இருந்து Flipkart நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதின் அடிப்படையில் Flipkart மூலம் Order செய்யப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட்டு ஜோன்ஸ் என்பவரது ரூ. 99,500/- பணம் பெறப்பட்டது.

இதே போன்று மற்றொரு வழக்கில் மனுதாரர் இழந்த பணம் அவருடைய credit card மூலம் Amazon இணையதளத்தில் பொருட்கள் கொள்முதல் செய்திருப்பது கண்டறியப்பட்டு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இருந்து Amazon நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதின் அடிப்படையில் Amazon மூலம் Order செய்யப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட்டு மனுதாரருடைய ரூ. 2,20,295/- பணம் பெறப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளில் மீட்கப்பட்ட பணத்தை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஒப்படைத்தார். மேலும், இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் தனிப்படை போலீஸாருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

செல்போனுக்கு வரும் SMS மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்புகொண்டு முகம் தெரியாத நபர் அனுப்பும் Link எதையும் Click செய்ய வேண்டாம். மேலும் வங்கி அலுவலர் போல் பேசி யார் OTP கேட்டாலும் அதை யாரிடமும் பகிர வேண்டாம். இதுபோன்ற சைபர் குற்ற மோசடியாளர்களிடம் இருந்து பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!