ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் 100 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில்  100 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
X
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், 'கடலோரப் பகுதி மாணவர்களுக்கான ஸ்டெர்லைட் கல்வித் திட்டம்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : பொருளாதார தடைக்கற்களால், மாணவர்களின் முறையான கல்வி தடைபடலாம், அர்த்தமுள்ள, வளமான எதிர்காலப் பணிகளைப் பெறுவதிலும் பாதிப்பு ஏற்படலாம். இந்தச் சூழ்நிலையால், குறைவான கல்வியும், அதனால் எதிர்காலத்தில் குறைவான வருவாயும், சிரமமான வாழ்நிலையும் கூட நமது சமுதாயத்தில் ஏற்படலாம்.

தூத்துக்குடி மாணவர்கள், பிரகாசமான எதிர்காலத்தை அடைவதற்கு ஊக்கப்படுத்தும் விதமாக, இன்று ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், 'கடலோரப் பகுதி மாணவர்களுக்கான ஸ்டெர்லைட் கல்வித் திட்டம்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, ஏற்கெனவே உள்ள தாமிர வித்யாலயா பள்ளி மற்றும் உதவித் தொகைத் திட்டத்தின் தொடர்ச்சியாகும். இந்த இரண்டாம் கட்டத்துக்கான தொடக்கவிழா நிகழ்ச்சியில், கடலோர சமுதாயங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு 5.45 லட்ச ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நேரில் காண்பதற்கு அம்மாணவர்களின் பெற்றோரும் அழைக்கப்பட்டனர்.

1 முதல் 5வது வகுப்பு வரை ரூ.4000, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ரூ.6000, 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு 7000, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ரூ.9000 நிதியுதவி வழங்கப்பட்டது. இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி, ஏ.சுமதி, "மாணவர்கள் தான் மொத்த சமுதாயத்தின் நம்பிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளனர். அவர்களுடைய கல்வி இலக்குகளை அடைவதற்கு இந்த முயற்சி ஓர் எளிய உதவியாகும். அதன் மூலம், அவர்களுடைய கனவுகளை அடையமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்," என்றார்.

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வழங்கிய முதல் கட்ட உதவித் தொகையைப் பெற்று, 7,000 மாணவர்கள் பயன்பெற்றனர். இந்த இரண்டாம் கட்ட உதவித் தொகை திட்டத்தில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், இந்தக் கல்வியாண்டில், தூத்துக்குடியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் 7,000 மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, உதவித் தொகை வழங்க திட்டமிட்டுள்ளது.

மாணவர்களின் கல்விக்குத் தேவையான நிதி உதவியை வழங்க, ஸ்டெர்லைட் காப்பர் ஏற்கெனவே பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்மூலம், ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டன, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன, பள்ளிகளின் உள்கட்டுமானங்கள் மேம்படுத்தப்பட்டன. மற்றொரு புதுமையான முயற்சி தான் தாமிர வித்யாலயா என்பது. இது, தூத்துக்குடி மாணவர்களுக்குத் தேவைப்படும் புதுமையான ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆகும்.

வேதாந்தா நிறுவனம் என்பது, வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட்டின் துணை நிறுவனம் ஆகும். இது எண்ணெய், எரிவாயு மற்றும் உலோக உற்பத்தியில் உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்று. மேலும், இந்நிறுவனம், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில், எண்ணெய் மற்றும் எரிவாயு, துத்தநாகம், ஈயம், வெள்ளி, தாமிரம், இரும்புத் தாது, ஸ்டீல், அலுமினியம், மின் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சிக்காக வேந்தாந்தா நிறுவனம் பணியாற்றி வருகிறது. வேதாந்தாவின் அடிப்படை பண்புகளில் நிர்வாகத் திறனும் நிலையான வளர்ச்சியும் தான் முக்கியமானவை. மேலும், அது ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலிலும் கவனம் செலுத்தி வருகிறது.

சமூகங்களுக்கு நன்மை செய்வது என்பது வேதாந்தாவின் மரபணுவிலேயே கலந்திருப்பது. அதன்மூலம் பல்வேறு உள்ளூர் சமூகங்கள் மேம்பாடு அடைய கவனம் செலுத்தி வருகிறது. வேதாந்தா கேர்ஸ் என்ற முயற்சியின் மூலம், நந்தகர்ஸ் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் உள்ளூர் அங்கன்வாடிகள் அமைக்கப்பட்டு, ஊட்டச்சத்துக் குறைபாடு களையப்படுவதோடு, கல்வியும் ஆரோக்கியம் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு சுயதொழில் கற்பிக்கப்பட்டு உயர்த்தப்படுகின்றனர்.

இந்த நிறுவனம், உலோகங்கள் மற்றும் சுரங்கத் துறையில் பெற்றுள்ள திறனுக்காக, டவ் ஜோன்ஸ் சஸ்டெயினபிளிட்டி இண்டெக்ஸில் இடம்பெற்றுள்ளதோடு, சிஐஐ-ஐடிசி சஸ்டெயினபிளிட்டி விருது, ஃபிக்கி சிஎஸ் ஆர் விருது, டன் & பிராட்ஸ்டிரீட் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளது. பணியாற்றுவதற்கு மிகச் சிறந்த நிறுவனம் எனவும் சான்றிதழ் பெற்றுள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில், வேதாந்தா லிமிடெட் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளதோடு, நியூயார்க் பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் ஏடிஆர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!