ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் தவறி விழுந்து பலி: உரிய நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை!
தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சந்தன செல்வி என்ற மனைவியும், 5 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் செல்வம் கடந்த 31ஆம் தேதி 4:30 மணிக்கு அப்பகுதியைச் சேர்ந்த சக மீனவர்களான ஜேசுராஜா, களஞ்சியம் என்பவர் உள்பட 10 மீனவர்கள் சேர்ந்து ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் ஆழ்கடலுக்கு கணவாய் மீன் பிடிக்க சென்றனர்.
ஆழ்கடலில் காசுவாரி தீவுக்கு கிழக்கே மீனவர்கள் 8 பேர் கடலுக்குள் இறங்கி கணவாய் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது செல்வம் மட்டும் ஆழ் கடலுக்குள் தவறி மாயமாகினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அவரை தேடி பார்த்தனர். ஆனால் பல மணி நேர தேடலுக்குப் பிறகும் கடலில் மாயமான செல்வத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கடலோர காவல் படை மற்றும் மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்த மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்து கடலில் மாயமான மீனவர் செல்வத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முயற்சியிலும் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை மீனவர் செல்வத்தின் உடல் கடலில் மிதப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் செல்வத்தின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மீனவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஆழ்கடலில் மீனவருக்கு ஒரு பிரச்சனை என்றால் அவசர உதவிக்கென தூத்துக்குடியில் எந்த ஏற்பாடுகளும் இல்லை. குறிப்பாக கடலில் மாயமான மீனவரை விரைந்து தேடும் பணியில் ஹெலிகாப்டர் மற்றும் அதிவிரைவு படகுகள் இருந்தால் மீனவர்களுக்கு தகுந்த உதவியாக இருக்கும். ஆனால் இவை இல்லாதது மிகப்பெரிய குறைகளாக உள்ளது. ஆகவே மீனவர்களின் நலன் கருதி தூத்துக்குடியில் கடலில் அவசர உதவிக்கென ஹெலிகாப்டர் மற்றும் அதிவிரைவு படகுகள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். கடலில் மாயமாகி இறந்த மீனவர் செல்வத்தின் குடும்பத்தினர் வருமானம் ஈட்டும் நபரை இழுந்து நிற்பதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்திடும் வகையில் தமிழக அரசு தகுந்த நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் கருணை அடிப்படையில் செல்வத்தின் மனைவிக்கு அரசு வேலை வழங்க பரிசீலிக்க வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu