தூத்துக்குடி மாவட்டத்தில் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தில் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிப்பு..
X

தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல் நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத் துறை மூலம் அமைக்கப்பட்ட நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் விடுபட்ட சங்கங்களின் புதிய நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், எட்டையபுரம் மற்றும் திருச்செந்தூர் வட்டங்களில் நீர்வளத் துறையினரால் அமைக்கப்பட்ட நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் விடுப்பட்ட தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.

நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து நவம்பர் 17 ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் வேட்பு மனுக்கள் பெறப்படும்.

பெறப்பட்ட வேட்பு மனுக்கள் நவம்பர் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கூர்ந்தாய்வு செய்து, ஏற்கத்தக்க வேட்பு மனுக்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும். போட்டியில் இருந்து விலகி கொள்ள விரும்பும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை 18 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அன்றையதினம் மாலை 5 மணிக்கு மேல் அறிவிப்பார்.

நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் விடுப்பட்ட தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 26 ஆம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அன்றையதினம் மாலை 4 மணி முதல் எண்ணத் தொடங்கி முடிவுகள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், எட்டையபுரம் மற்றும் திருச்செந்தூர் வட்டங்களை சேர்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் விடுப்பட்ட தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவலரால் பெற்றுக் கொள்ளப்படும்.

மேலும், கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!