தூத்துக்குடியில் குடிபோதை மறுவாழ்வு இல்லம் கட்ட அடிக்கல்.. எஸ்.பி. பங்கேற்பு
தூத்துக்குடியில் நடைபெற்ற ‘குடிபோதை நோய் மறுவாழ்வு இல்லம்” அடிக்கல் நாட்டு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்சீனி காலனி பகுதியில், தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டம் சார்பில், மறைமாவட்ட நூற்றாண்டு திட்டத்தின் கீழ் இறைடியார் சூசைநாதர் ‘குடிபோதை நோய் மறுவாழ்வு இல்ல” அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளவர்களை ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் கண்டறிந்து அவர்களை இந்த குடிபோதை நோய் மறுவாழ்வு இல்லத்தில் தங்கவைத்து, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, கவுன்சிலிங் மற்றும் தியானம் போன்றவற்றை அளித்து அவர்களை நல்வழிப்படுத்தி சமூகத்தில் நல்ல குடிமகனாக மாற்றுவதற்காக இந்த இல்லம் கட்டப்பட உள்ளது என மறைமாவட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிபோதை நோய் மறுவாழ்வு இல்லம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ், பெங்களூரு செபமாலைதாசர் சபை உயர்தலைவர் ஜஸ்டின் ராஜ் ஆகியோர் செய்து உள்ளனர். மேலும், அடிக்கல் நாட்டு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக சிவன் கோவில் குருக்கள் சிவகுமார், மணிகண்டன், வார்டு கவுன்சிலர் வைதேகி, பரதர் நலச் சங்க தலைவர் ரெனால்ட் வில்லவராயர் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தி, உதவி ஆய்வாளர்கள் சிவகுமார், முகிலரசன், முத்தமிழரசன், பயிற்சி உதவி ஆய்வாளர் ராமலெட்சுமி, தனிப்பிரிவு தலைமைக் காவலர் மாரிக்குமார் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu