நீண்ட இழுபறிக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றிய திமுக!

நீண்ட இழுபறிக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றிய திமுக!
X

மாவட்ட ஊராட்சித் தலைவி பிரம்மசக்திக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி அதிமுக வசம் இருந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு அந்தப் பதவியை தற்போது திமுக கைப்பற்றி உள்ளது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 உறுப்பினர் பதவிகளில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றது.

மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி பொது பெண் பிரிவுக்கு ஒத்துக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், அதிமுகவைச் சேர்ந்த 5 ஆவது வார்டு உறுப்பினர் சத்யா தலைவராகவும், 10 ஆவது வார்டு உறுப்பினர் செல்வக்குமார் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். அப்போதைய அமைச்சர் கடம்பூர் ராஜூவின் நண்பர் ராமச்சந்திரனின் மகள் என்பதால் சத்யாவுக்கு அந்த பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என திமுக சார்பில் பல்வேறு வியூகங்கள் அமைக்கப்பட்டன. மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், சமூக நலன் துறை அமைச்சர் கீதாஜீவன் மௌனம் காத்து வந்தார்.

பொது பெண் பிரிவு என்பதால் மாவட்ட ஊராட்சித் தலைவி பதவியை 15 ஆவது வார்டு உறுப்பினர் பிரம்மசக்திக்கு கிடைக்க அனைத்து வேலைகளும் அப்போதே தொடங்கப்பட்டன. இவர், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கரின் மனைவி ஆவார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மனசாட்சிபோல செயல்படுவர் உமரி சங்கர் என்பதால் யாரும் அந்த முயற்சிக்கு குறுக்கே நிற்கவில்லை.

இதையெடுத்து, அதிமுகவைச் சேர்ந்த துணைத் தலைவரான செல்வக்குமார் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் திடீரென தங்களை அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைத்துக் கொண்டனர். தலைவராக இருந்த சத்யா மற்றும் 13 ஆவது வார்டு உறுப்பினர் பேச்சியம்மாள் மட்டுமே அதிமுகவில் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்த சத்யா மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் கடந்த மே மாதம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் செல்வகுமார் தலைமையில் 14 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அப்போதைய தலைவர் சத்யா உள்ளிட்ட 3 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற 14 உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், சத்யா தலைவர் பதவியை இழந்தார்.

ஆனால், தன்மீது எந்தவித காரணங்களும் இல்லாமல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்ததாக சத்யா நீதிமன்றத்துக்குச் சென்றதால் இழுபறி நீடித்தது. இதற்கிடையே, துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த செல்வக்குமார் திடீரென பதவி விலகியதால் அந்தப் பதவிக்கு 7 ஆவது வார்டு உறுப்பினர் சந்திரசேகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் திமுகவில் இணைந்தவர் ஆவார்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப் படி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடம் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஊராட்சித் தலைவருக்கான தேர்தல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு 15 ஆவது வார்டு உறுப்பினர் பிரம்மசக்தியை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலில், சத்யா மற்றும் பேச்சியம்மாள் தவிர, மற்ற 15 உறுப்பினர்களும் ஆஜராகினர்.

மாவட்ட ஊராடச்சித் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரம்மசக்தி மீன்வளத் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், மாவட்ட ஊராட்சித் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிம்மசக்திக்கு ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுகவைச் சேர்ந்த பிரம்மசக்தி மாவட்ட ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடந்த 5 மாதங்களாக நீடித்து வந்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்