தூத்துக்குடி நீதிமன்ற கட்டிடத்தில் மேற்தள கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு...

தூத்துக்குடி நீதிமன்ற கட்டிடத்தில் மேற்தள கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு...
X

மேற்தள கான்கிரீட் பெயர்ந்த நிலையில் காணப்படும் நீதிமன்ற கட்டிடம்.

தூத்துக்குடி நீதிமன்ற கட்டிடத்தில் மேற்தள கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கடந்த 1938 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தொடர்ந்து, அந்த வளாகத்தில் பல்வேறு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய கட்டுமானம் கொண்ட குற்றவியல் நீதிமன்ற கட்டிடத்தில் மேற்தள கான்கிரீட் திடீரென இடிந்து விழுந்தால் வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த விவகாரம் குறித்து, சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பின் அமைப்பாளர் அதிசயகுமார், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு நீதிபதிகள் சிவஞானம்,வேலுமணி ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்ட சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பின் அமைப்பாளராகவும், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளாக வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகின்றேன். தூத்துக்குடி மாநகரத்தில் 1938 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்து சுமார் 84 ஆண்டுகள் கடந்து விட்டன.


இந்தக் கட்டிடத்தின் கிழக்குப் பகுதியில் இரண்டாவது தளத்தில் நில மோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றமும், முதல் தளத்தில் தலைமை குற்றவியல் நீதிமன்றமும், கீழ்த்தளத்தில் நீதித்துறை நடுவர் எண் 2 மற்றும் 3 நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2021 ஆம் ஆண்டு பெய்த மழையினால் இந்தக் கட்டிடங்கள் பலவீனமடைந்துள்ளன. கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள மேற்தள கான்கிரீட்டுகள் பெயர்ந்து இடிந்து விழுந்ததினால் இந்தத் தளத்தில் செயல்பட்டு வந்த நில மோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றமும், அதன் அலுவலகமும், நீதிபதி அறையும் உடைய இரண்டாவது தளமானது மூடி சீல் வைக்கப்பட்டு அந்தப் பகுதியில் யாரும் செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நீதிமன்றங்களில் முதல் தளத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம் செயல்பட்டு வரும் இடத்திற்கு மேல் பகுதியில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றம் (எண்- 2) நீதிமன்றத்திற்கு செல்வதற்கு ஒரு தனி வழி உள்ளது. அந்த வழியில் உள்ள மேற்கூரைகளின் கான்கிரீட் ஆனது இடிந்து விழுந்ததினால் அந்த வழியும் அடைக்கப்பட்டு உள்ளது.

இரண்டாவது தளமானது முழுவதுமாக அடைக்கப்பட்டும், முதல் தளத்தில் இருந்து மாவட்ட கூடுதல் நீதிமன்றத்திற்கு செல்லும் வழி அடைக்கப்பட்ட நிலையிலும், கட்டிடத்தின் பல பகுதிகள் விரிசல்கள் ஏற்பட்டும் கான்கிரீட்டுகள் இடிந்து விழுந்து வருவதினாலும் இந்த நீதிமன்ற கட்டிடம் அபாயகரமான நிலையில் உள்ளது.

இந்த நீதிமன்றங்களில் வழக்காடிகளும், வழக்கறிஞர்களும், அலுவலகப் பணியாளர்களும், நீதிபதிகளும் தினமும் அவர்களது பணியின் காரணமாக கட்டிடத்திற்குள் சென்று வருகின்றனர். பலவீனம் அடைந்த இக்கட்டிடமானது ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, இடிந்து விழும் நீதிமன்ற கட்டிடத்தில் உறுதித்தன்மையை மதிப்பீடு செய்யும் வரை இந்தக் கட்டிடத்தில் இயங்கி வரும் நீதிமன்றங்களை மூடி சீல் வைத்து புதிய கட்டிடத்திற்கு மாற்ற செய்ய வேண்டியது அவசியமாகின்றது. ஒருங்கிணைந்த நீதிமன்ற பழைய கட்டிடமானது பலவீனமடைந்ததற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தெரிவதினால் அந்தக் கட்டிடத்தின் உறுதித்தன்மையை மதிப்பீடு செய்ய வேண்டும்.

மேலும், பலவீனமான கட்டிடங்களில் செயல்பட்டு வரும் நீதிமன்றங்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும்படியும் கேட்டுக் கொள்கின்றோம் என மனுவில் அதிசயகுமார் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து, தலைமைச் செயலாளர், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர், சட்டத்துறை முதன்மைச் செயலாளர், தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் ஆகியோருக்கும் மனுவின் நகலை வழக்கறிஞர் அதிசயகுமார் அனுப்பி உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!