தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 23 போலீசாருக்கு சான்றிதழ்
சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 23 பேருக்கு வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கும் எஸ்பி ஜெயக்குமார்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் நீண்ட நாட்களாக புலன் விசாரணையில் இருந்து வந்தது. இந்வழக்கில் கலியாவூரைச் சேர்ந்த பெருமாள் (60) என்பவரை கைது செய்த முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், தலைமை காவலர் சுந்தர்ராஜ், முதல் நிலை காவலர்கள் சதீஷ் தணிகைராஜா, சுரேஷ்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காக அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதேபோல, கடந்த 03.08.2021 அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்க நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் தனிப்படை அமைத்து எதிரியை கண்டறிந்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா, உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஜேம்ஸ், மணி, முதல் நிலை காவலர் சந்தனமாரி, காவலர்கள் மாரியப்பன், பலவேசபார்த்திபன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காக சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும், கோவில்பட்டி மேற்கு, நாலாட்டின்புதூர், கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் தொடர்புடைய எதிரியை 04.08.2021 அன்று கைது செய்து அவரிடம் இருந்து 64 சவரன் தங்க நகைகள், 4 இருச்சக்கர வாகனங்கள் மற்றும் பணம் ரூபாய் 2 லட்சம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
இந்த வழக்கில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் முருகன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் ரெங்காலெட்சுமி, கொப்பம்பட்டி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் ஸ்ரீராம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடந்த 01.08.2021 அன்று புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்களில் 5 எதிரிகள் ஒரு சிறுமியை கடத்தி வந்ததை பார்த்து அவர்களை பன்னீர்குளம் சாலையில் வைத்து மடக்கிப் பிடித்த கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன், முதல் நிலை காவலர் மோகன்ராஜ், காவலர் பாலமுருகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காக சான்றிதழ் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி அழகர் ஜங்ஷனில் போக்குவரத்து ஒழுங்கு அலுவல் செய்து கொண்டிருந்தபோது பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் குடிபோதையில் காரை ஒட்டி வந்தவரை தடுத்து நிறுத்தி, மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து விபத்து எதுவும் ஏற்படாத வகையில் பணிபுரிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் செல்வராஜ் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும், காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ்குமார், செல்வி. பவித்ரா, செல்வி. ஷாமளாதேவி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu