தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தல்

தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தல்
X

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் மாரிசெல்வம் பேசினார்.

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தி உள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், முத்தையாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ரோபி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் ராஸிக் முஸம்மில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெரினா பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் மாரிசெல்வம் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தின்போது, தாமிரபரணி ஆற்றில் இருந்து வரக்கூடிய தண்ணீர் சுத்தமின்றி அசுத்தமாக இருப்பதால் அதனை குடிக்கும் பொது மக்களுக்கு நோய் பரவும் ஆபத்து நிலவி வருவதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நல்ல சுத்தமான குடிநீர் மக்களுக்கு வழங்க வேண்டும்.

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டை மின்சார வாரிய அதிகாரிகள் தலையிட்டு மின்வெட்டு இல்லாமல் மக்களுக்கு மின் விநியோகம் கொடுக்க வேண்டும். முத்தையாபுரம் பல்க் ஜங்ஷனில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திட மாவட்ட காவல் துறை நிர்வாகம் தலையிட்டு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து காவலர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்தி விபத்துக்கள் நடக்காமல் தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் முத்தையாபுரம் பல்க் சந்திப்பு பகுதியில் வேகத்தடை அல்லது சிக்னல் அமைத்து தர தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முத்தையாபுரம் பகுதி சார்பாக போராட்டம் நடத்தப்படும்.

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சாக்கடை நீருக்குள் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதால், திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட கொள்கை பரப்பு தலைவர் மாரியப்பன், மாவட்ட ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் தினகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மைக்கேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings