மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை: தூத்துக்குடி மாநகராட்சி

மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை: தூத்துக்குடி மாநகராட்சி
X

மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யும் பணி தொடரும் என எச்சரிக்கை

மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை தொடரும் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ எச்சரித்துள்ளார்

தூத்துக்குடியில் மாநகராட்சி பணிகளுக்கு இடையூறு செய்யும் விதத்தில் நாளிதழ், வாட்ஸ்அப், மற்றும் வலைதளங்களில் மின்மோட்டார் பறிமுதல் செய்யும் பணியானது மாநகராட்சியால் கைவிடப்பட்டுள்ளது என தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத் தக்கதாகும். மின் மோட்டார்கள் பறிமுதல் மற்றும் அபராதங்கள் விதிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கும் பொருட்டு கடந்த வாரத்தில் குடிநீர் விநியோகத்தின் போது மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் குடிநீர் வினியோக பணியாளர்களால் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. மேற்படி ஆய்வின்போது சட்டத்திற்கு முரணாகவும் குடிநீர் விநியோக விதிகளை மீறியும் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொருத்தி உறிஞ்சி எடுப்பது கண்டறியப்பட்டது.

மேற்படி முறைகேடான செயலில் ஈடுபட்ட கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து கடந்த வாரத்தில் மட்டும் 62 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி பணிகளுக்கு இடையூறு செய்யும் விதத்தில் நாளிதழ், வாட்ஸ்அப் ,மற்றும் வலைதளங்களில் மின்மோட்டார் பறிமுதல் செய்யும் பணியானது மாநகராட்சியால் கைவிடப்பட்டுள்ளது என தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கதாகும். மாநகரின் அனைத்து பகுதிகளின் கடைமடை பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சட்ட விதிகளுக்கு முரணாக குடிநீர் குழாய் இணைப்பில் குறிப்பாக நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாய்களில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் வினியோகம் செய்யப்படும் கடைசி பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்காமல் உறிஞ்சி எடுக்கப்படும் செயல் சட்டத்திற்கு முரணானதாகும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களின் மின் மோட்டார்கள் பறிமுதல் மற்றும் அபராதங்கள் விதிக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து மின் மோட்டார்களை உடனடியாக அகற்றி மாநகராட்சியின் குடிநீர் குழாய் துண்டிப்பு அபராதம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆகியவற்றை தவிர்த்து கொள்ளுமாறும் சீரான குடிநீர் வினியோகம் தொடர்பாக மாநகராட்சி எடுக்கும் அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Tags

Next Story